2008-09-13 14:13:10

கியூபாவிற்குப் பணம் அனுப்பவும் அங்கு செல்லவும் அனுமதி வழங்க அமெரிக்க ஆயர்கள் கோரிக்கை


செப்.13,2008. அண்மையில் ஏற்பட்ட குஸ்தாவ் கடும் புயலால் பெரும் மனிதாபிமான நெருக்கடிகளை எதிர்நோக்கும் கியூபாவிற்குப் பயணம் செய்வது மற்றும் பணம் அனுப்புவதற்கான அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசின் தடையை, இப்பேரிடரின் பொருட்டு, தற்காலிகமாவாவது அகற்றுமாறு அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள், அதிபர் ஜார்ஜ் புஷ்சை கேட்டுள்ளனர்.

அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவைத் தலைவரான கர்தினால் பிரான்சிஸ் ஜார்ஜ், அதிபர் புஷ்சுக்கு அனுப்பிய கடிதத்தில், கியூபாவின் மீதான தடையை நீக்குவது தேவையான ஒரு நடவடிக்கை, இதனைத் தாமதமின்றி செயல்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளார்.

கடுமையான மனிதாபிமான நெருக்கடிகளை எதிர்நோக்கியிருக்கும் கியூப மக்களுக்கு, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் நிவாரண நிறுவனமான சி.ஆர்.எஸ் மூலம் அல்லது தாராள மனதுள்ள தனியாட்கள் மூலம் உதவிகள் சென்றடைய வழி செய்யப்படுமாறு கர்தினாலின் கடிதம் ௬றுகிறது.

கியூபாவிற்கு எதிரான அமெரிக்க ஐக்கிய நாட்டு வர்த்தகத் தடை 47 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது.

அண்மையில் கியூபாவைத் தாக்கிய குஸ்தாவ் புயலில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன அல்லது அழிந்துள்ளன.








All the contents on this site are copyrighted ©.