2008-09-12 15:19:56

செப்.13 புனித ஜான் கிறிசோஸ்தம் - இயேசுவே உமது அன்பிற்காக எத்தனை முறையும் அல்லல்படத் தயார்


அலைகளோ மிகுதி. ஆபத்தான கடற் கொந்தளிப்பு. நாம் மூழ்கி விடுவோம் எனக் கவலைப்படுவது கிடையாது. ஏனெனில் நாம்தான் கிறிஸ்துவாகிய பாறையின் மீது நிற்கிறோமே. கடல் முழங்கினாலும் அது பாறையைப் பிளக்க முடியாது. அலைகள் வானளாவ உயர்ந்து எழுந்தாலும் அவை இயேசுவின் படகைக் கவிழ்க்க முடியாது. பொருளை இழந்து விடுவோம் என்ற பயமா. இல்லை. நாம் இவ்வுலகிற்கு வரும் போது எதுவும் எடுத்து வருவதில்லை. போகும் போதும் எதுவும் எடுத்து செல்வதில்லை. எனவே மக்களே நன்மனத்தோராய் மட்டும் வாழுங்கள்.

இவ்வாறு உரையாற்றியவர் புனித ஜான் கிறிசோஸ்தம். கிறிசோஸ்தம் என்றால் பொன்வாய் என்று பொருள். அந்தியோக்கியா நகரில் பிறந்த இவர் கடுந்தவ வாழ்க்கையை மேற்கொண்டார். 386இல் குருவானார். அவரது ஆயருக்கு எல்லாவற்றிலும் வலது கரமாக இருந்து செயல்பட்டார். பின்னர் இவரைக் கட்டாயப்படுத்தி ஆயர் பொறுப்பை ஏற்கச் செய்தனர். அரச குலத்தினரின் தவறுகளையும் கொடுமைகளையும் அம்பலப்படுத்தினார். ஆயர்களின் ஊழல்களையும் வெளிக் கொணர்ந்தார். எனவே அலெக்சாந்திரியா நகரின் ஆயரான தியோபிலசும் அரசியான யூடோக்சியாவும் இவரைப் பழி வாங்கும் நோக்கத்தில் கதை கட்டி நாடு கடத்தினார்கள். அர்மேனியாவில் 3 ஆண்டுகள் வைக்கப்பட்ட பின்னர் கருங்கடலுக்கு அப்பால் அவரைக் கொண்டு சென்ற சமயம் கொமேனா என்ற நகரில் தளர்ச்சியினால் தமது 52 வது வயதில் உயிரிழந்தார். இயேசுவே உமது அன்பிற்காக எத்தனை முறையும் அல்லல்படத் தயார் என்றரைத்த புனித ஜான் கிறிசோஸ்தமுக்கு இன்று திருச்சபை விழா எடுக்கின்றது.

சிந்தனைக்கு - நேர்மையைவிட மேலான பண்பு இல்லை.








All the contents on this site are copyrighted ©.