2008-09-10 18:16:48

திருத்தந்தையின் புதன் மறைபோதகம் 10செப்டம்பர்.


திருத்தந்தை 6 ஆம் பவுல் அரங்கத்தில் கூடியிருந்ததவர்களுக்கு வாழ்த்துக்கூறி அவர்களை வரவேற்றார் திருத்தந்தை . இன்று இயேசுவின் திருத்தூதர் என்பவரின் தன்மை பற்றி புனித பவுல் அடிகளார் கூறியுள்ளதைக் காண்போம் என்றார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் . இயேசு இம்மண்ணுலகில் பணி செய்த காலத்தில் அவரோடு இருந்த பன்னிரு சீடர்களுள் ஒருவராகத் திருத்தூதர் பவுல் இருக்கவில்லை . இருப்பினும் தூய பவுல் தம்மைத் திருத்தூதர் என்ற பட்டத்துக்கு உரியவராகக் கருதினார் . ஏனென்றால் இறையருளால் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்தம் வாழ்வில் மாற்றம் பெற்றார் . திருத்தூதர்களை அணிசெய்யும் மூன்று முக்கிய பண்புகளைப் பவுல் அடிகளார் கொண்டிருந்தார். முதலாவதாக ஆண்டவர் இயேசுவை நேரில் காணுதலும் அவரால் தேர்வு செய்யப்படுதலுமாகும். ஒருவர் திருத்தூதர் ஆவது அவரது சொந்த விருப்பத்தால் அல்ல , இறைவன் அளிக்கும் அழைப்பால் அவருடைய சீடராக, தூதராக ஆகிறார். இது தூய பவுல் அடிகளாரின் வாழ்வில் நடந்ததை அவர் கொரிந்தியருக்கு எழுதிய திருமடலில் அதிகாரம் 9, 1 ல் காண்கிறோம் . திருத்தூதரின் அடுத்த பண்பு அவர் அழைப்புக்கு ஆண்டவரே முதற்காரணமாக இருக்க வேண்டும். ஒரு திருத்தூதர் ஆண்டவரால் அனுப்பப்படுகிறார். கிறிஸ்துவின் பிரதிநிதியாகப் பேசுகிறார் . தன்னை முழுவதுமாக ஆண்டவரின் பணிக்கு அர்பணிக்கிறார் . மூன்றாவது பண்பு நற்செய்திக்காக உழைப்பதும் கிறிஸ்தவக் குழுமங்களை உருவாக்குவதுமாகும் . இந்தக் குறிக்கோளுக்காக அஞ்சாது திருத்தூதர் பவுல் பட்ட சோதனைகள் வேதனைகள் அவருடைய அர்ப்பணத்துக்குச் சான்று பகர்கின்றன. திருத்தூதரின் வாழ்வுக்கும் அவர் வழங்கும் நற்செய்திக்கும் உள்ள ஒன்றிப்பைத் திருத்தூதர் பவுல் அவர் தம் வாழ்வில் காட்டுகிறார் . நற்செய்தியை ஏற்காதபோது திருத்தூதரும் ஏற்கப்படுவதில்லை . திருத்தூதர் பவுல் அவர்பட்ட துன்பங்களிலும் தடைகளிலும் குறையாத இயேசுவின் அன்பால் தாங்கப்பட்டார். திருத்தூதர் பவுலின் அப்போஸ்தலிக்க ஆர்வம் நமக்கும் அகத்தூண்டுதல் அளித்து உற்சாகமும் ஊக்கமும் ஊட்டுவதாக எனச் செபித்து வந்திருந்த அனைவருக்கும் அவரது அப்போஸ்தலிக்க ஆசியை வழங்கினார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் .








All the contents on this site are copyrighted ©.