2008-09-09 15:09:28

12 வது உலக ஆயர் மன்றத்திற்கு அதிக பெண் பிரதிநிதிகள் நியமனம்


செப்.9, 2008. 12 வது உலக ஆயர் மன்றத்திற்கு உலகின் ஒவ்வொரு பகுதியிலுமிருந்து பல்வேறு துறைகளின் ஆண்களும் பெண்களும் என 32 வாக்குரிமை பெற்ற உறுப்பினர்கள், 41 வல்லுநர்கள் மற்றும் 37 பார்வையாளர்களைத் திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் நியமித்துள்ளார்.

இவர்களில் வல்லுநர்களாக ஆறு பெண்களும் பார்வையாளர்களாக 19 பெண்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். திருச்சபையில் இதுவரை நடைபெற்ற உலக ஆயர் மன்றங்களில் கலந்து கொண்ட பெண்களின் எண்ணிக்கையைவிட தற்சமய எண்ணிக்கை அதிகமாகும்.

தேசிய ஆயர் பேரவைகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏறத்தாழ 180 ஆயர்களுடன் திருத்தந்தை நியமித்துள்ள 32 குருக்களும் முழு உறுப்பினர்களாகப் பங்கேற்பர். இவ்வுலக ஆயர் மன்றத்திற்கென 10 குருக்கள் துறவு சபைகள் அதிபர்கள் கழகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இன்னும் திருத்தந்தை, 12 மறைமாவட்டத் தலைவர்கள் உட்பட 18 கர்தினால்களையும் நியமித்துள்ளார். இவர்கள் மக்காவோ ஆயர் கோசே லாய் ஹிங் செங் உட்பட ஆசியா, ஆப்ரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவைச் சார்ந்தவர்களாவர்.

திருப்பேராயங்களின் தலைவர்கள் , திருப்பீட அவைகளின் தலைவர்கள் என ஏறத்தாழ 24 கர்தினால்கள், பேராயர்கள் தங்கள் பதவியினிமித்தம் உலக ஆயர் மன்றத்தின் உறுப்பினர்களாக உள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.