2018-07-16 15:22:00

AMECEAவின் 19வது நிறையமர்வு கூட்டம் ஆரம்பம்


ஜூலை,16,2018. கிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள ஆயர் பேரவைகளை ஒருங்கிணைக்கும் அமைப்பான AMECEAவின் 19வது நிறையமர்வு கூட்டம், ஜூலை 15 இஞ்ஞாயிறன்று, எத்தியோப்பியா நாட்டின் தலைநகர் Addis Ababaவில் ஆரம்பமானது.

ஜூலை 15 இஞ்ஞாயிறன்று துவங்கியுள்ள AMECEA ஆயர்கள் கூட்டத்தில், எரித்ரியா, எத்தியோப்பியா, கென்யா, மலாவி, சூடான், தென் சூடான், டான்சானியா, உகாண்டா, மற்றும் சாம்பியா ஆகிய நாடுகளிலிருந்து ஏறத்தாழ 200 ஆயர்கள் கலந்துகொள்கின்றனர்.

Addis Ababa வின் பேராயரும், AMECEAவின் தலைவருமான கர்தினால் Berhaneyesus Souraphiel அவர்கள், இக்கூட்டத்தின் ஆரம்பத் திருப்பலியை, எத்தியோப்பிய கத்தோலிக்க வழிபாட்டு முறையில் நடத்தினார்.

"துடிப்புள்ள பன்முகத்தன்மை, சமமான மாண்பு, இறைவனில் சமாதானம் நிறைந்த ஒற்றுமை" என்ற மையக்கருத்துடன் நிகழும் இக்கூட்டத்தின் இறுதியில், கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் நிலையான சமாதானம் நிலவும் வழிகளைத் தேடுவோம் என்று கர்தினால் Souraphiel அவர்கள், தன் மறையுரையில் கூறினார்.

மனித கலாச்சாரத்தின் தொட்டில் என்றழைக்கப்படும் எத்தியோப்பியாவில் முதல் மனிதர்களின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன என்பதும், இந்த நாடு, ஏனைய நாடுகளின் காலனிய ஆதிக்கத்திற்கு கீழ் வராத ஓர் ஆப்ரிக்க நாடு என்பதும் குறிப்பிடத்தக்கன.

ஆதாரம் : வத்திக்கான் செய்திகள்








All the contents on this site are copyrighted ©.