2018-07-13 16:06:00

வெனிசுவேலாவை தற்கொலைப் பாதையில் இழுத்துச் செல்லும் அரசு


வெனிசுவேலா நாட்டைச் சூழ்ந்துள்ள இடர்பாடுகள் நடுவில் மக்கள் நம்பிக்கை இழக்காமல் செபிக்கவேண்டும் என்று ஆயர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

ஜூலை,12,2018. வெனிசுவேலா நாட்டின் தலைமைத்துவத்தில் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டி, அந்நாட்டு ஆயர்கள் கடினமான ஒரு விமர்சனத்தை தங்கள் ஆண்டறிக்கையில் வெளியிட்டுள்ளனர்.

அத்துமீறிய ஆணவம், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், மனித உரிமைகள் தொடர்ந்து மீறப்படுதல் ஆகிய தவறுகள், வெனிசுவேலா நாட்டை அதிகம் பாதித்து வருகின்றன என்று ஆயர்கள் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.

நீதிக்காகவும், நல்லதொரு மாற்றத்திற்காகவும் குரல் கொடுப்போரை கொடூரமாக வேட்டையாடிவரும் இன்றைய அரசு, நாட்டை, தற்கொலைப் பாதையில் இழுத்துச் செல்கிறது என்று, ஆயர்கள் தங்கள் ஆண்டு கூட்டத்தின் இறுதியில் வெளியிட்ட அறிக்கையில் எடுத்துரைத்துள்ளனர்.

உணவு, குடிநீர், மருத்துவ உதவிகள் ஆகிய அடிப்படைத் தேவைகள் ஏற்கனவே மிகக் குறைந்த நிலையில் உள்ள வெனிசுவேலா நாட்டில், தற்போது, தனிமனித பாதுகாப்பு, வேலைகள் ஆகிய ஏனைய தேவைகளும் குறைந்துவருவது, வேதனை தருகிறது என்று ஆயர்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.

இத்தனை இடர்பாடுகள் சூழ்ந்தாலும், மக்கள் நம்பிக்கையோடு செபிக்கவேண்டும் என்றும், நீதியை நிலைநாட்டும் போராட்டத்தைக் கைவிடக் கூடாது என்றும் ஆயர்களின் அறிக்கை அறிவுறுத்துகின்றது.

ஆதாரம் : CNA/வத்திக்கான் செய்திகள்








All the contents on this site are copyrighted ©.