2018-07-13 15:58:00

எரிட்ரியா கத்தோலிக்கத் திருஅவை அமைதிக்காக செபம்


ஜூலை,13,2018. எரிட்ரியா மற்றும், எத்தியோப்பிய நாடுகளுக்கு இடையே நீடித்த அமைதி நிலவுவதற்கென, ஒரு மாத செப நடவடிக்கை ஒன்றை, எரிட்ரிய கத்தோலிக்க ஆயர்கள் ஆரம்பித்துள்ளனர்.

எரிட்ரியா ஆயர்கள் வெளியிட்டுள்ள மேய்ப்புப்பணி அறிக்கையில், எரிட்ரியா மற்றும், எத்தியோப்பிய நாடுகளின் தலைவர்கள் அண்மையில் கையெழுத்திட்டுள்ள அமைதி ஒப்பந்தத்திற்கு இறைவனுக்கு நன்றி சொல்வோம், அதேவேளை, நீடித்த அமைதியும், நீதியும் நிலவ, தொடர்ந்து உருக்கமாக, சிறப்பு செபங்களை இறைவனை நோக்கி எழுப்புவோம் எனக் கூறியுள்ளனர்.

கடந்த வாரத்தில் எரிட்ரியத் தலைநகர் ஆஸ்மாராவில் இவ்விரு நாடுகளின் தலைவர்களுக்கு இடையே இடம்பெற்ற கூட்டத்தில், அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

எரிட்ரியாவும், எத்தியோப்பியாவும், எல்லைத் தகராறு காரணமாக, 1998 மற்றும் 2000மாம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் நடத்திய சண்டைகளைத் தொடர்ந்து, பல ஆண்டுகளாக இவ்விரு நாடுகளுக்கு இடையே பதட்டநிலைகள் நிலவி வந்தன. ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்குப்பின், தற்போது முதல் முறையாக இவ்விரு நாடுகளின் பிரதமர்கள் சந்தித்துள்ளனர்.

இந்நாடுகளின் தலைவர்கள் சந்தித்து கையெழுத்திட்டுள்ள அமைதி ஒப்பந்தம் குறித்து, தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ஆயர்கள், அனைத்து பங்குத்தளங்களும், துறவற நிறுவனங்களும், இந்த ஒரு மாத செப முயற்சியை ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதற்கிடையே, எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவில், ஜூலை 13, இவ்வெள்ளியன்று, கிழக்கு ஆப்ரிக்க ஆப்ரிக்க ஆயர்களின் கூட்டம் ஆரம்பமாகியுள்ளது. இக்கூட்டம், ஜூலை 23ம் தேதி நிறைவடையும்.

ஆதாரம் : வத்திக்கான் செய்திகள்








All the contents on this site are copyrighted ©.