2018-07-10 15:33:00

காடுகள் வருங்காலத்திற்கு இன்றியமையாதவை, ஐ.நா.


ஜூலை,10,2018. காடுகளும், மரங்களும், பெருமளவான மக்கள் அறிந்திருப்பதற்கு அதிகமாகவே மனித வாழ்வுக்கு உதவுகின்றவேளை, இவை, உணவு பாதுகாப்பு, குடிநீர், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கிராமப் பொருளாதாரம் போன்றவற்றிற்கு முக்கிய பங்காற்றுகின்றன என்று, ஐ.நா.வின் புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.

FAO எனப்படும் ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனத்தின் இயக்குனர் José Graziano da Silva அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளரும் நாடுகளில் கிராம மக்களுக்கு ஏறத்தாழ இருபது விழுக்காடு வருவாயை காடுகள் வழங்குகின்றன என்றும், உலக அளவில் மூன்றில் ஒருவருக்கு சமைக்கவும், வெப்பமூட்டவும் இவை உதவுகின்றன என்றும் கூறப்பட்டுள்ளது.

காடுகள், உலகின் வருங்காலத்திற்கு இன்றியமையாதவை என்பதால், அவற்றைப் பாதுகாக்க, அரசுகள் தீவிர முயற்சிகள் எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ள, Graziano da Silva அவர்கள், காலநிலை மாற்றத்திற்கு, காடுகள் அழிந்துவருவது இரண்டாவது முக்கிய காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

உலகின் பல பெரிய ஆற்றுப்பள்ளத்தாக்குகள், மரங்களை இழந்துள்ளன என்றும், FAO நிறுவனம் கூறியுள்ளது. நீடித்த நிலையான வளர்ச்சி பற்றிய, உயர்மட்ட அளவிலான  அரசியல் கூட்டம், நியு யார்க்கில் ஜூலை 09. இத்திங்களன்று தொடங்கியுள்ளதையொட்டி, FAO நிறுவனம், இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

ஆதாரம் : UN / வத்திக்கான் செய்திகள்








All the contents on this site are copyrighted ©.