2018-07-09 16:28:00

தென் சூடான் நாட்டு குழந்தைகள் நிலையில் முன்னேற்றமில்லை


ஜூலை,09,2018. தென் சூடான் நாட்டில் கடந்த 7 ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளுள் நான்கிற்கு மூன்று பேர், போரைத் தவிர வேறு எது குறித்தும் தெரியாதவர்கள் என ஐ.நா.வின் யுனிசெஃப் நிறுவனம் தன் கவலையை வெளியிட்டுள்ளது.

தென் சூடானின் சுதந்திரத்திற்குப்பின், அதாவது, கடந்த 7 ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளுள் 75 விழுக்காட்டினர், போரைத் தவிர வேறு எது குறித்தும் தெரியாதவர்கள் எனவும், 19 ஆயிரம் குழந்தைகள், ஆயுதக் குழுக்களால் பயன்படுத்தப்படுகின்றனர் எனவும், 10 இலட்சம் குழந்தைகள், போதிய சத்துணவின்றி வாடுகின்றனர் எனவும் உரைக்கிறது, குழந்தைகளுக்கான அவசரகால நிதி நிறுவனம் யுனிசெஃப்.

தென் சூடான் நாட்டில் 33 விழுக்காட்டு கல்விக் கூடங்கள் இயங்காமல் இருப்பதாகவும், 20 இலட்சம் சிறார் பள்ளிகளை விட்டு வெளியேறியுள்ளதாகவும் கூறும் யுனிசெஃபின் அறிக்கை, 10 இலட்சம் குழந்தைகள் தங்கள் சொந்த இடங்களைவிட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கிறது.

ஆயுதக் கும்பல்களின் கைகளிலிருந்து இவ்வாண்டில் 800 சிறார்கள் மீட்கப்பட்ட போதிலும், இன்னும் 19,000 சிறார்கள் அயுதம் தாங்கியவர்களாகவும், சமையல் பணியாளர்களாகவும், செய்திகளை கொண்டு செல்பவர்களாகவும் ஆயுத கும்பல்களிடம் உள்ளதாக இந்த ஐநா. அமைப்பு கூறுகிறது

ஆதாரம் : வத்திக்கான் செய்திகள்








All the contents on this site are copyrighted ©.