2018-07-09 16:24:00

கடல்சார் தொழிலாளர்களுக்கு செபிக்க வேண்டிய நம் கடமை


ஜூலை,09,2018. கடல்சார் தொழிலாளர்களுக்காகவும் அவர்களின் குடும்பங்களுக்காகவும் தனிப்பட்ட விதத்தில் செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறன்று உலக கடல் ஞாயிறு சிறப்பிக்கப்பட்டதைக் குறித்து, தன் மூவேளை செப உரையின் இறுதியில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடலில் பயணம் செய்வோர், கடல் சார்ந்த தொழிலில் ஈடுபட்டிருப்போர், மீனவர்கள், அவர்களின் குடும்பங்கள், அவர்களிடையே பணிபுரியும் அருள்பணியாளர்கள், சுய விருப்பப் பணியாளர்கள் என அனைவருக்காகவும் செபித்தார்.

கடலில், மாண்பு குறைந்த பணிகளில் ஈடுபட்டிருக்கும் மக்களுக்காகவும், கடலை மாசுக்கேட்டிலிருந்து மீட்க பணியாற்றும் மக்களுக்காகவும், சிறப்பான விதத்தில் செபிப்பதாகவும் கூறினார் திருத்தந்தை.

மேலும், தன் மூவேளை செப உரையின் இறுதியில், இச்சனிக்கிழமையன்று பாரி நகரில் இடம்பெற்ற  கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வழிபாட்டைப் பற்றிக் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அது, கிறிஸ்தவ ஒன்றிப்பின் ஓர் உன்னத அடையாளமாக இருந்ததாகவும், அதில் பங்குபெற்ற அனைவருக்கும் தன் நன்றியை வெளியிடுவதாகவும் தெரிவித்தார்.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறன்று வெளியிட்டுள்ள தன் டுவிட்டர் செய்தியில், கிறிஸ்துவின் நற்செய்தியை பறைசாற்றிட கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பும் நல் வாய்ப்பே என கூறியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் செய்திகள்








All the contents on this site are copyrighted ©.