2018-07-06 16:11:00

புலம்பெயர்ந்தவரின் உரிமைகள், மாண்பு மதிக்கப்பட அழைப்பு


ஜூலை,06,2018. புலம்பெயர்ந்தவர் போன்று, தேவையில் இருப்போர்க்கு உதவ விரும்பாத, அதேநேரம், நல்லவர்கள் போன்று நடிக்கும் வெளிவேடக்காரர்கள் இன்றைய நம் காலத்திலும் உள்ளனர் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

இத்தாலியின் இலாம்பெதூசா தீவுக்குப் பயணம் மேற்கொண்டதன் ஐந்தாம் ஆண்டு நினைவாக, ஏறத்தாழ 200, புலம்பெயர்ந்தவர் மற்றும் அவர்களுக்கு உதவுகின்றவர்களுக்கு, இவ்வெள்ளியன்று, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை, புலம்பெயர்ந்தவரின் உரிமைகளும், மாண்பும் மதிக்கப்பட வேண்டுமென அழைப்பு விடுத்தார்.

தேவையில் இருப்போர்க்கு உதவுவதற்கு விரும்பாதவர்கள், தங்களின் கரங்களை அழுக்காக்க விரும்பாதவர்கள் என்றும், நம்மைப் போன்று மாண்புடனும், பாதுகாப்புடனும் வாழ்வை அமைத்துக்கொள்ள விரும்புகின்றவர்களைப் புறக்கணிப்பவர்கள் என்றும் திருத்தந்தை கூறினார்.

அரசின் சரியான கொள்கைகள், மனிதருக்குச் சேவையாற்றுவதாயும், எல்லா மனிதரையும் உள்ளடக்குவதாயும் அமைய வேண்டும் என்று மறையுரையில் கூறியத் திருத்தந்தை, புலம்பெயர்ந்தவரின் உரிமைகளும், மாண்பும் பாதுகாக்கப்படுவதற்கு, சரியான தீர்வுகள் காணப்படுமாறும் கேட்டுக்கொண்டார்.

புலம்பெயர்வு பிரச்சனை முன்வைக்கும் சவாலுக்கு, ஒருமைப்பாடும் இரக்கமுமே ஒரே தீர்வு என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆபத்தான கடல் பயணத்தை மேற்கொண்டுவரும் புலம்பெயரும் மக்களின் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்குத் தன் நன்றியைத் தெரிவித்தார்.

இத்திருப்பலியின் இறுதியில், புலம்பெயர்ந்தவர் ஒவ்வொருவரையும் கைகுலுக்கி தேற்றிய திருத்தந்தை, தனது இலாம்பதூசா பயணத்தையும் நினைவுகூர்ந்தார்.

ஆதாரம் : வத்திக்கான் செய்திகள்








All the contents on this site are copyrighted ©.