2018-07-05 15:55:00

'இறைவா உமக்கே புகழ்', ஒரு வழிகாட்டி – கர்தினால் பரோலின்


ஜூலை,05,2018. மனித குலத்திற்கு தொடர்ந்து சவால்கள் விடுத்துவரும் சுற்றுச்சூழல் ஆபத்துக்களைக் குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 'இறைவா உமக்கே புகழ்' என்ற திருமடலில் கூறியுள்ள கருத்துக்கள், உலகின் அனைத்து தரப்பினராலும் வரவேற்கப்பட்டு வருகிறது என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

2015ம் ஆண்டு மே மாதம் வெளியான 'இறைவா உமக்கே புகழ்' திருமடலின் மூன்றாம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் வண்ணம், உரோம்  நகரில் நடைபெறும் ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கில், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் வழங்கிய துவக்க உரையில் இவ்வாறு கூறினார்.

இத்திருமடல் வழியே திருத்தந்தை பகிர்ந்துள்ள கூற்றுகள், அறிவியல் நிறுவனங்களாலும், மத நம்பிக்கை கொண்ட அனைத்து மக்களாலும் வரவேற்கப்பட்டுள்ளன என்று கர்தினால் பரோலின் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

திருமடலின் மூன்று அம்சங்கள்

இத்திருமடலில் கூறப்பட்டுள்ள பல்வேறு கருத்துக்களில் மூன்று அம்சங்களை தான் தனிப்பட்ட முறையில் குறிப்பிட விழைவதாக கர்தினால் பரோலின் அவர்கள், தன் உரையில் கூறினார்.

நமது பொதுவான இல்லமான பூமிக்கோளம் சந்தித்துவரும் பல்வேறு நெருக்கடிகளை, தகுந்த தருணத்தில் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது திருத்தந்தையின் இத்திருமடல் என்பதை, முதல் அம்சமாக, கர்தினால் பரோலின் அவர்கள் குறிப்பிட்டார்.

உண்மையான மத நம்பிக்கையையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் இணைத்துப் பேசியிருப்பது, இத்திருமடலின் இரண்டாவது சிறப்பு அம்சம் என்று கர்தினால் பரோலின் அவர்கள் கூறினார்.

மூன்றாவதாக, மனித வாழ்வு, கடவுள், அயலவர், உலகம் என்ற மூன்று தொடர்புகள் வழியே இயங்கவேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தும் இத்திருமடல், இம்மூன்று உண்மைகளை இணைத்துப் பார்க்கும் கண்ணோட்டம், ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் இயலாக இத்திருமடலில் கூறப்பட்டுள்ளது என்று கர்தினால் பரோலின் அவர்கள் தன் உரையில் எடுத்துரைத்தார்.

'இறைவா உமக்கே புகழ்' - ஒரு வழிகாட்டி

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது ஒரு நீண்ட பயணம் என்பதால், இப்பயணத்தில் நம்மை வழிநடத்த 'இறைவா உமக்கே புகழ்' என்ற திருமடல் பெரும் உதவியாக இருக்கும் என்று கர்தினால் பரோலின் அவர்கள் கூறினார்.

இத்திருமடலை மையப்படுத்தி நடைபெறும் பன்னாட்டு கருத்தரங்கில் பொருள்நிறைந்த விவாதங்களும், முடிவுகளும் உருவாக தான் வாழ்த்துவதாக கர்தினால் பரோலின் அவர்கள் தன் உரையின் இறுதியில் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் செய்திகள்








All the contents on this site are copyrighted ©.