2018-07-04 15:49:00

மெக்சிகோவின் புதிய அரசுத்தலைவருக்கு ஆயர்களின் பாராட்டுக்கள்


ஜூலை,04,2018. மெக்சிகோ நாட்டில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசுத்தலைவர் Andrés Manuel López Obrador அவர்களுக்கு அந்நாட்டு ஆயர்கள் தங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.

எந்த ஒரு தலைவரும், அனைத்து பிரச்சனைகளுக்கும், தனிப்பட்ட மனிதர் என்ற முறையில், தீர்வுகளைக் காணமுடியாது என்றும், மக்கள் அனைவரோடும் இணைந்து செயலாற்றுவதே, தீர்வுகள் காண்பதற்குச் சிறந்த வழி என்றும், ஆயர்கள் கூறியுள்ளனர்.

தரமான கல்வி புகட்டுதல், வறுமையை எதிர்த்துப் போராடுதல், ஏற்றத்தாழ்வுகளை வெல்லுதல் ஆகியவை, மெக்சிகோ நாடு தற்போது எதிர்கொள்ள வேண்டிய தீவிரமான சவால்கள் என்பதை, ஆயர்கள், அரசுத்தலைவருக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

அரசுத்தலைவர் தேர்தலின் போது நிகழ்ந்த வன்முறைகளையும், உயிர் பலிகளையும் தாங்கள் வன்மையாகக் கண்டனம் செய்வதாக, மெக்சிகோ ஆயர்கள் கூறியுள்ளனர்.

தங்களிடமுள்ள தேர்ந்தெடுக்கும் சக்தியை, பொறுப்புள்ள முறையில் பயன்படுத்தி, மாற்றத்தைக் கொண்டுவந்திருக்கும் மக்களை, பாராட்டியுள்ள ஆயர்கள், மக்கள் எதிர்பார்க்கும் நல்ல மாற்றங்களை உருவாக்குவது, புதிய அரசின் கடமை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் செய்திகள்








All the contents on this site are copyrighted ©.