2018-07-04 15:12:00

உலகுசார் துறவு கன்னியர் அமைப்பு சட்டத்தொகுப்பு நூல் வெளியீடு


ஜூலை,04,2018. திருஅவை, கிறிஸ்துவின் மணப்பெண் என்ற கூற்றுக்கு ஓர் அடையாளமாக, அர்ப்பணிக்கப்பட்ட கன்னியர் வாழ்கின்றனர் என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

திருஅவையில் பணியாற்றிவரும் பல்வேறு துறவற சபைகளைச் சாராமல், தனி நபர்களாக அர்ப்பண வாழ்வைத் தெரிவு செய்துள்ள கன்னியர்களை மையப்படுத்தி, "Ecclesia Sponsae Imago" அதாவது, “மணப்பெண்ணின் உருவமான திருஅவை” என்ற தலைப்பில், சட்டத் தொகுப்பு நூலொன்றை, அர்ப்பணிக்கப்பட்டோர் திருப்பீட பேராயம், இப்புதனன்று வெளியிட்டது.

இந்நூலை வெளியிட்ட இப்பேராயத்தின் தலைவர் கர்தினால் João Braz de Aviz அவர்கள், தனிப்பட்ட முறையில் தங்கள் வாழ்வை அர்ப்பணிக்க முன்வரும் கன்னியர்களின் வாழ்வு முறையை, திருத்தந்தை அருளாளர் 6ம் பால் அவர்கள், 1970ம் ஆண்டு, அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டதை நினைவுகூர்ந்தார்.

.உலகுசார் துறவு கன்னியர் அமைப்பைச் சார்ந்தோரின் அழைத்தலைச் சிறப்பிக்கும் முறையில் 2020ம் ஆண்டு, உரோம் நகரில், ஒரு பன்னாட்டு கூட்டம் நடத்தப்படும் என்று கர்தினால் João Braz de Aviz அவர்கள், இப்புதனன்று, செய்தியாளர்கள் கூட்டத்தில் அறிவித்தார்.

உலகெங்கிலும் உள்ள பல்வேறு மறைமாவட்டங்களில், உலகுசார் துறவு கன்னியரின் எண்ணிக்கை, 5000த்திற்கும் அதிகம் என்றும், இவ்வெண்ணிக்கை, ஆண்டுதோறும் கூடிவருகிறது என்றும், கர்தினால் João Braz de Aviz அவர்கள் இக்கூட்டத்தில் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் செய்திகள்








All the contents on this site are copyrighted ©.