2018-07-02 16:11:00

புலம்பெயர்ந்தோருக்கு பணி புரிய அரசை வலியுறுத்தும் ஆயர்கள்


ஜூலை,02,2018. அடைக்கலம் தேடி ஐரோப்பாவுக்குள் நுழையும் புலம்பெயர்ந்தோர் காப்பாற்றப்பட வேண்டும் என்ற விண்ணப்பத்துடன், 38,000க்கும் மேற்பட்டோரின் கையெழுத்துக்களுடன் கடிதம் ஒன்றை சுவிட்சர்லாந்து அரசிடம் சமர்ப்பித்துள்ளது,  அந்நாட்டு தலத்திருஅவை.

புலம்பெயர்ந்தோரின் பெருந்துன்பங்கள் குறித்து சுவிட்சர்லாந்தோ, ஐரோப்பிய நாடுகளோ தங்கள் கண்களை மூடி, பாராமுகமாய் இருக்கமுடியாது என்ற கருத்தை வலியுறுத்தி சமர்ப்பிக்கப்பட்டுள்ள சுவிட்சர்லாந்து ஆயர்களின் விண்ணப்பத்திற்கு, 'வாழ்வுகளுக்கு மீட்பளிக்க பாதுகாப்பான வழிகள்' என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

மனிதாபிமான பாரம்பரியத்தைக் கொண்டுள்ள சுவிட்சர்லாந்து நாடு, ஐரோப்பாவின் தென்பகுதியில் புலம்பெயர்ந்தோர் முகாம்களில் வாடும் மக்கள் தங்கள் வாழ்வை நன்முறையில் தொடர உதவவேண்டும், என அதில் குறிப்பிட்டுள்ளனர் ஆயர்கள்.

ஐ.நா.வின் புலம்பெயர்ந்தோருக்கான அவையின் பரிந்துரைகளைப் பின்பற்றி, துன்புறும் மக்களுக்கு ஆற்றவேண்டிய கடமைகளை, சுவிட்சர்லாந்து அரசியல் தலைவர்களிடம் வலியுறுத்தியுள்ள ஆயர்கள், புலம்பெயர்ந்தோரின் பணியில் ஏற்கனவே தங்களை முற்றிலுமாக ஈடுபடுத்தியுள்ள திருஅவை அதிகாரிகள், அரசின் முயற்சிகளிலும் உதவ எப்போதும் தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.