2018-06-30 15:27:00

கிறிஸ்துவின் திருஇரத்தக் குழுமம் கனிவுப் புரட்சிக்குச் சேவை


ஜூன்,30,2018. கிறிஸ்துவின் திருஇரத்தக் குழுமத்தின் ஏறத்தாழ மூவாயிரம் உறுப்பினர்களை இச்சனிக்கிழமையன்று, அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்து உரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்துவின் திருஇரத்தம், உலக மீட்பின் ஊற்றாக உள்ளது என்றும், மற்றவர்க்கு வழங்கும் வாழ்வின் மிக உன்னதமான அன்பை வெளிப்படுத்த, இரத்த அடையாளத்தைத் தவிர வேறு எதுவும் இல்லையென்பதால், கடவுள் இதனைத் தேர்ந்துகொண்டார் என்றும், திருத்தந்தை கூறினார்.

கிறிஸ்துவின் தியாகப்பலி மீது மேற்கொள்ளப்படும் தியானம், நம் வாழ்வைக் கடவுளுக்கும், பிறருக்கும் கையளிக்கச் செய்கின்றது மற்றும் அத்தியானம், இரக்கப் பணிகள் ஆற்ற நம்மைத் தூண்டுகிறது என்று கூறியத் திருத்தந்தை, உடல் மற்றும் மனத்தளவில் துன்புறுவோர், நுகர்வுத்தன்மை மற்றும் புறக்கணிப்பால் சமுதாயத்தின் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டோருக்குப் பணியாற்றவும், அத்தியானம் தூண்டுகிறது என்று கூறினார்.  

கிறிஸ்துவின் திருஇரத்தக் குழுமத்தின் பணிகள் மற்றும் அவர்களின் சான்றுவாழ்வுக்கு உதவுவதற்கென, உண்மையைத் துணிச்சலுடன் எடுத்துரைத்தல், எல்லார் மீது, குறிப்பாக, தொலைவில் இருப்பவர் மீது அக்கறை, கவர்ச்சிகரப் பேச்சு மற்றும் தொடர்புகொள்ளும் திறமை ஆகிய மூன்று கூறுகளைப் பரிந்துரைக்க விரும்புவதாகத் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நற்செய்தியின் விழுமியங்களையும், உலகம் மற்றும் மனிதர் பற்றிய உண்மையையும் அழுத்தமாக, அச்சமின்றி எடுத்துரைக்கும், சமூகங்களைக் கட்டியெழுப்புவதற்கு துணிச்சலான மக்களாக இருப்பது அவசியம் என்றும், மனித வாழ்வு, தாயின் கருவறை முதல் கல்லறை வரைப் பாதுகாக்கப்படுவது தாக்குதலுக்கு உள்ளாகும்போது, புறமுதுகு காட்டாமல் வாழ்வின் மாண்பு பற்றியும், ஏழ்மையின் பல்வேறு வடிவங்கள் மற்றும் சமூகத் தீமைகளின் முன்னும், தெளிவாகப் பேசுவதற்குத் துணிச்சல் தேவை என்றும் திருத்தந்தை கூறினார்.

தெருக்களில் நடந்து, கவர்ச்சிகரமான பேச்சுகள் மற்றும் தொடர்புகளால், திருஅவையின் உருவத்தை எடுத்துரைக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, இயேசு போதித்த முறையைப் பின்பற்றி, கடவுளின் இரக்கம் மற்றவர்க்குக் கிடைப்பதற்கு உதவுமாறும் கூறினார்.

ஜூலை மாதம் முழுவதும் கிறிஸ்துவின் திருஇரத்தத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஜூலை முதல் தேதி கிறிஸ்துவின் திருஇரத்த விழா. திருத்தந்தை 9ம் பயஸ் அவர்களால்  இவ்விழா உருவாக்கப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.