2018-06-28 16:20:00

புனிதர்கள் பேதுரு பவுல் பெருவிழாவில் கிறிஸ்தவ ஒன்றிப்பு சபை


ஜூன்.28,2018. கிறிஸ்தவ ஒன்றிப்பு சபையின் முதுபெரும்தந்தை பார்த்தலோமேயு அவர்களின் சார்பாக, பேராயர் Telmissos Job அவர்களின் தலைமையில், உரோம் நகருக்கு வருகை தந்துள்ள இச்சபையின் பிரதிநிதிகள் குழுவை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்தார்.

ஜூன் 29 சிறப்பிக்கப்படும் திருத்தூதர்களான புனிதர்கள் பேதுரு பவுல் பெருவிழாவன்று கிறிஸ்தவ ஒன்றிப்பு சபையின் பிரதிநிதிகள் உரோம் நகருக்கு வருகை தருவதுபோல், நவம்பர் 30ம் தேதி சிறப்பிக்கப்படும் திருத்தூதர் அந்திரேயா பெருவிழாவன்று கத்தோலிக்கத் திருஅவையின் பிரதிநிதிகள் இஸ்தான்புல் நகருக்குச் செல்வது ஒவ்வோர் ஆண்டும், நிகழ்ந்துவருகிறது.

ஜூன் 27ம் தேதி உரோம் நகருக்கு வருகை தந்த கிறிஸ்தவ ஒன்றிப்பு சபை பிரதிநிதிகள், கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவையின் உறுப்பினர்களை சந்தித்தனர்.

இவ்வியாழன் காலை திருத்தந்தையைச் சந்தித்த இக்குழுவினர், மாலை புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் புதிய கர்தினால்களுக்குப் பொறுப்புகள் வழங்கப்பட்ட திருவழிபாட்டு நிகழ்விலும் பங்கேற்றனர்.

மேலும், ஜூன் 26, இச்செவ்வாயன்று, திருப்பீடத்திற்கும், சான் மரினோ குடியரசுக்கும் இடையே, அரசு சார்ந்த ஒப்பந்தம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது என்று திருப்பீட செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் விளைவாக, சான் மரினோ குடியரசில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கத்தோலிக்க மறை சொல்லித்தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.