2018-06-28 15:49:00

பிறர் காலடிகளில் அமர்ந்து பணியாற்றுவதில் வருவது அதிகாரம்


ஜூன்.28,2018. எருசலேமுக்குச் செல்லும் பயணத்தில் இயேசு தன் சீடர்களின் முன் நடந்து, தனக்கே உரிய பாணியில் அவர்களுக்குப் பாடம் சொல்லித்தருகிறார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழன் மாலை வழங்கிய மறையுரையில் கூறினார்.

ஜூன் 28, இவ்வியாழன் மாலை, புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் 14 புதிய கர்தினால்களுக்கு தொப்பியும் மோதிரமும் அணிவிக்கும் சிறப்பு திருவழிபாட்டு நிகழ்வை தலைமையேற்று நடத்தியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "அவர்கள் எருசலேமுக்குப் போகும் வழியில் சென்றுகொண்டிருந்தார்கள். இயேசு அவர்களுக்குமுன் போய்க்கொண்டிருந்தார்" (மாற்கு 10:32) என்ற சொற்களை மேற்கோளாகக் குறிப்பிட்டு தன் மறையுரையைத் துவங்கினார்.

எருசலேமுக்குச் செல்வது, தன் பாடுகளை எதிர்கொள்ள என்பதை இயேசு மூன்றாம் முறையாகத் தெளிவுபடுத்திய அவ்வேளையிலும் சீடர்களின் உள்ளங்களில் பதவி ஆசை, பொறாமை, உலக சக்திகளோடு சமரசம் போன்ற எண்ணங்கள் இருந்தன என்பதை திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.

சீடர்களின் உள்ளங்களை ஆக்கிரமித்திருந்த இவ்வெண்ணங்கள் அவர்களது உறவைப் பாதித்து, அவர்களை தன்னலச் சிறைகளில் அடைத்திருந்தாலும், இயேசு அவர்களுக்கு முன் சென்றதோடு, "உங்களிடையே அப்படி இருக்கக் கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும்" (மாற்கு 10:43) என்ற கோணத்தில் அவர்களைச் சிந்திக்கத் தூண்டினார் என்று திருத்தந்தை தன் மறையுரையில் தெளிவுபடுத்தினார்.

"உங்களிடையே அப்படி இருக்கக் கூடாது" என்று இயேசு விடுத்த சவால், இன்று நம் உள்ளங்களிலும், திருஅவையிலும் மாற்றங்களைக் கொணர்வதற்கு உதவியாக உள்ளது என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.

"உங்களிடையே அப்படி இருக்கக் கூடாது" என்று கூறிய இயேசு "உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும்" என்று கூறியபோது, மழைப்பொழிவில் கூறிய பேறுபெற்றோர் எண்ணங்களையும், மரியாவின் புகழ்ப்பாடலையும் நினைவுக்குக் கொணர்கிறார் என்று திருத்தந்தை தன் மறையுரையில் கூறினார்.

எருசலேம் நோக்கி நாம் பயணிக்கும் வேளையில், இயேசு நம் முன் செல்கிறார், நமக்கு வழங்கப்படும் அதிகாரம், அடுத்தவர் காலடிகளில் அமர்ந்து பணியாற்றுவதன் வழியே வருகிறது என்ற கருத்தை, கர்தினால்களுக்கும், புதிய கர்தினால்களுக்கும் சிறப்பான முறையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையின் இறுதியில், புனிதத் திருத்தந்தை 23 ஜான் அவர்களின் ஆன்மீக எண்ணங்களிலிருந்து ஒரு பகுதியை மேற்கோளாகக் கூறினார்.

"நான் ஏழையாகப் பிறந்தேன். ஏழையாக இறப்பதில் மகிழ்வடைகிறேன். வறியோரின் தேவைகளுக்கு ஏற்ப என்னிடம் இருப்பதை பகிர்ந்தளிப்பதில் நான் மன நிறைவு கொள்கிறேன்" என்று புனித 23ம் ஜான் அவர்கள் எழுதிவைத்த எண்ணங்களைக் கூறி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.