2018-06-27 15:21:00

சாம்பலில் பூத்த சரித்திரம் : புனித வனத்து அந்தோனியார் - 2


ஜூன்,27,2018. திருஅவையில், அந்தோனி என்ற பெயரில் பல புனிதர்கள் போற்றப்பட்டு வருகின்றனர். இத்தாலியின் பதுவை நகரில் வாழ்ந்த போர்த்துக்கல் நாட்டு அந்தோனியார், பதுவை புனித அந்தோனியார், கோடி அற்புதர் என்றெல்லாம் போற்றப்படுகிறார். மூன்றாம் நூற்றாண்டில் எகிப்தில், பாலைநிலத்திலும், காட்டிலும் கல்லறையிலும் தனியாக வாழ்ந்த கடுந்துறவியான அந்தோனியாரை, புனித பெரிய அந்தோனியார், புனித வனத்து அந்தோனியார், எகிப்து அந்தோனியார், பாலைநில அந்தோனியார், Thebes நகர் அந்தோனியார், உலக வாழ்விலிருந்து ஒதுங்கியிருந்த அந்தோனியார், எல்லாத் துறவிகளுக்கும் தந்தை, என்றெல்லாம் அவர் அழைக்கப்படுகிறார். எகிப்து நாட்டில் கி.பி.251ம் ஆண்டு பிறந்த புனித வனத்து அந்தோனியார், 356ம் ஆண்டு சனவரி 17ம் நாளன்று இறைவனடி சேர்ந்தார். இவர், கிறிஸ்தவ துறவு ஆதீனங்களுக்கு தோற்றுவாய் என கருதப்படுகிறார். Thebes புனித பவுலின் சீடராகிய இப்புனிதர், தனது கடுந்தவ வாழ்வை தனது இருபதாவது வயதிலிருந்தே தொடங்கினார். இவரின் புனித வாழ்வால் ஈர்க்கப்பட்ட பலர், இவரைத் தேடிச் சென்று ஆலோசனைகள் பெற்றனர். இவர்களில் பலர் பின்னாளில் இவரின் சீடரானார்கள். இப்புனிதர் வழங்கிய அனைத்து அறிவுரைகளும் நற்செய்தியின் அடிப்படையில் இருந்தன. அற்புதமாகப் பலரைக் குணப்படுத்தினார். 

பாலைநிலத்தில் தனியாக கடுந்தவ வாழ்வு வாழ்ந்து வந்த புனித வனத்து அந்தோனியார் பற்றி அறிய வந்த இரு கிரேக்க மெய்யியலாளர்கள், ஒருசமயம் அவரைத் தேடி அங்குச் சென்றனர். அப்போது புனிதர் அவர்களிடம், இவ்வளவு முட்டாள் ஒருவரிடம் பேசுவதற்காக, எதற்காக இவ்வளவு தூரம் பயணம் செய்து வந்தீர்கள்? எனக் கேட்டார். ஏனெனில் இப்புனிதர், மிருகங்களின் தோலை ஆடையாக அணிந்திருந்தார். ஒருநாளும் குளிப்பதில்லை. ரொட்டி மற்றும் தண்ணீர் மட்டுமே அவரது உணவு.  இப்படி அசிங்கமாகத் தோற்றமளிக்கும் மனிதரை எதற்காக அவர்கள் காண வரவேண்டுமென புனிதர் எண்ணினார். இப்புனிதரைத் தேடி வந்தவர்களோ கிரேக்கர்கள். அக்காலத்தில், கிரேக்க கலாச்சாரம் உலகினரால் மிகவும் வியந்து பார்க்கப்பட்டது. இப்புனிதரோ எகிப்தியர். மெய்யியலாளர்களான அவ்விருவரும், மொழிகளையும், பேச்சுக்கலையையும்  கற்றுத் தேர்ந்தவர்கள். ஆனால் இப்புனிதர், சிறுவனாக இருந்த சமயத்திலிருந்தே பள்ளிக்குச் சென்றதில்லை. எனவே இப்புனிதர், கிரேக்க மெய்யியலாளர்களிடம் பேசுவதற்கு,  ஒரு துணையாளர் தேவைப்பட்டார். அவர்களின் கண்களுக்கு, தான் ஒரு முட்டாள் போன்று தோன்றியிருக்கலாம் என நினைத்தார் புனித வனத்து அந்தோனியார். ஆனால் அந்த கிரேக்க மெய்யியலாளர்கள், புனித வனத்து அந்தோனியார் பற்றிச் சொல்லப்படும் கதைகள் பற்றிக் கேள்விப்பட்டிருந்தார்கள். எல்லா இடங்களிலிருந்தும் சீடர்கள் அவரிடம் வந்து கற்றுச் செல்வது, அவரின் பரிந்துரையால் அற்புதங்கள் நிகழ்வது, அவரின் வார்த்தைகளால் துன்புறும் மக்கள் ஆறுதலடைவது போன்றவை பற்றி கேள்விப்பட்டிருந்தார்கள். அவர் ஞானமுள்ள மனிதராக இருப்பதால் அவரிடம் அவர்கள் வந்தனர். இந்நிலையில் அவ்விருவரும் அவரிடம் எதிர்பார்ப்பது என்ன என்பதை, புனிதர் யூகித்துக் கொண்டார். வார்த்தைகளாலும், விவாதங்களாலும் வாழும் அவர்கள். கிறிஸ்தவம் பற்றிய உண்மையையும், கடும்தவ வாழ்வின் மதிப்பு பற்றியும் புனிதரிடமிருந்து அறிய விரும்பினர். ஆனால் புனிதர் இதற்கு மறுத்துவிட்டார். "நான் ஞானி என்று நீங்கள் நினைத்தால், நான் இருப்பதுபோல் நீங்களும் மாறுங்கள். ஏனெனில் நாம் நன்மையைப் பின்பற்ற வேண்டியவர்கள். நான் உங்களிடம் வந்திருந்தால், நான் உங்களைப் பின்பற்றி இருப்பேன். ஆனால் நீங்கள் என்னிடம் வந்துள்ளீர்கள். எனவே நான் இருப்பதுபோல மாறுங்கள். நான் கிறிஸ்தவன்" என்று சொன்னார், புனித வனத்து அந்தோனியார்.

புனித வனத்து அந்தோனியாரின் முழுவாழ்வும், பார்வையிட அல்ல, மாறாக அந்த வாழ்வாக மாறுவதற்காக இருந்தது. அவரின் பெற்றோர் இறந்தபோது அவருக்கு ஏறக்குறைய வயது இருபது. அச்சமயத்தில் அவர் 300 ஏக்கர் நிலத்திற்குச் சொந்தக்காரராக இருந்தார். அவரது தங்கையும் அவர் பொறுப்பில் இருந்தார். தங்கை தனது படிப்பை முடிக்க வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார். தங்கையையும் பாதுகாப்பான இடத்தில் விட்டுவிட்டு, தன் சொத்துக்களை, உறவினர் மற்றும் ஏழைகளிடம் கொடுத்துவிட்டு, துறவிகள் குழுவில் சேர்ந்தார். தனது 35வது வயதில் பாலைநிலம் சென்று தனியாக வாழ்ந்தார். இருபது ஆண்டுகள் பாழடைந்த ஒரு கோட்டையில் வாழ்ந்தார். இவரின் வாழ்வால் ஈர்க்கப்பட்ட சிலர், கோட்டையை உடைத்து உள்ளே சென்றனர். பலர், இவரின் சீடர்களாக சேர விரும்பினர். எனவே, நைல்நதிக் கரையில் இரு துறவு மடங்களை (Pispir, Arsinoe) நிறுவினார். கி.பி.311ம் ஆண்டில் தனிமை வாழ்வைத் துறந்து அலெக்சாந்திரியா நகர் சென்று, எகிப்தில் பரவிவந்த ஆரியனிச தப்பறைக் கொள்கைகளுக்கு எதிராகப் போதித்தார். பேரரசன் மாக்சிமுசின் கிறிஸ்தவர்க்கெதிரான சித்ரவதைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலளித்தார். ஒரு கட்டத்தில் அவர் தன் சகோதரியைச் சந்தித்தார். அவரும் அருள்சகோதரிகள் துறவு குழுமத்தை வழிநடத்தி வருவதைக் கண்டார். மீண்டும் பாலைநிலம் சென்று, Colzim மலையிலுள்ள குகையில் வாழ்ந்தார் இப்புனிதர். இவரின் வாழ்வால் கவரப்பட்ட பலர், துறவு வாழ்வை மேற்கொண்டனர். நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து 356ம் ஆண்டில் இவர் காலமானார்.

கிறிஸ்துவில் ஆழமான விசுவாசம் மற்றும் இறைபராமரிப்பில் முழு நம்பிக்கை வைத்து வாழ, புனித வனத்து அந்தோனியாரின் வாழ்வு அழைப்பு விடுக்கின்றது. தொற்று நோயாளர், குறிப்பாக தோல் நோயாளர், இப்புனிதரிடம் சிறப்பாகச் செபித்து குணம் அடைகின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.