2018-06-26 16:00:00

பாலஸ்தீன புலம்பெயர்ந்தவர்களுக்கு திருத்தந்தை நிதி உதவி


ஜூன்,26,2018. பாலஸ்தீன புலம்பெயர்ந்த மக்களுக்கு உதவுதல், மத்திய கிழக்கிலும், வட ஆப்ரிக்காவிலும் அமைதி ஆகிய இரு தலைப்புக்களில், ஐ.நா.நிறுவனத்தின் தலைமையகத்தில் இத்திங்களன்று நடைபெற்ற கூட்டங்களில் திருப்பீடத்தின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தார், பேராயர் பெர்னார்தித்தோ அவுசா.

ஐ.நா.வில் திருப்பீடத்தின் நிரந்தரப் பிரதிநிதியாகப் பணியாற்றும் பேராயர் அவுசா அவர்கள், ஐ.நா.வின் UNRWA அமைப்பு, பாலஸ்தீன புலம்பெயர்ந்த மக்களுக்கு ஆற்றிவரும் பணிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்த அமைப்புக்கு, ஒரு இலட்சம் டாலரை வழங்கச் சொல்லியுள்ளார் என்று கூறினார்.

அண்மை கிழக்கு நாடுகளிலுள்ள பாலஸ்தீன புலம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணப் பணிகளை ஆற்றிவரும் UNRWA அமைப்பின் தலைவரை, கடந்த மார்ச் 17ம் தேதி வத்திக்கானில் சந்தித்து, அந்த அமைப்பின் பணிகளை திருத்தந்தை ஊக்கப்படுத்தினார் என்பதையும் குறிப்பிட்டார், பேராயர் அவுசா.

பாலஸ்தீன புலம்பெயர்ந்த மக்களின் நிலைமை மேம்படாதவரை, UNRWA அமைப்பின் பணிகள், ஐம்பது இலட்சத்திற்கு மேற்பட்ட பாலஸ்தீன புலம்பெயர்ந்தவர்களுக்கு விலைமதிப்பற்றதாய் இருக்கும் என்றும், பேராயர் அவுசா அவர்கள் கூறினார்.

மேலும், மத்திய கிழக்கிலும், வட ஆப்ரிக்காவிலும் அமைதி எனும் தலைப்பில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையில், எருசலேம் புனித நகரத்தின் உலகளாவிய தன்மையை அனைத்து நாடுகளும் மதிக்க வேண்டும் என வலியுறுத்தினார், பேராயர் அவுசா

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.