2018-06-25 15:44:00

“Casale 4.5” மாற்றுத்திறனாளர்கள் இல்லத்தில் திருத்தந்தை


ஜூன்,25,2018. இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசம், பாவம், கவலை, வெறுமை, தனிமை ஆகியவற்றினின்று நம்மை விடுவிக்கும். எவருமே நீக்கிவிட முடியாத மகிழ்வின் ஊற்று அது என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், இத்திங்களன்று வெளியாயின.

மேலும், உரோம் நகரின் புறநகரில், மாற்றுத்திறனாளர்கள் பராமரிக்கப்படும் “Casale 4.5” எனப்படும் இல்லத்திற்கு, இஞ்ஞாயிறு மாலையில் சென்று, அங்கு ஏறக்குறைய 200 பேரைச் சந்தித்து, அவர்களை அரவணைத்து அவர்களுடன் உரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.  

வெள்ளிக்கிழமை இரக்கச் செயல்களின் ஒரு பகுதியாக, இத்தகைய இடங்களைப் பார்வையிடும் திருத்தந்தை, இஞ்ஞாயிறன்று, ஒரு கூட்டமைப்பு நடத்தும், ‘நம் காலத்திலும், நமக்குப் பின்னும் இருக்கின்ற இல்லம்’ எனப்பொருள்படும் மாற்றுத்திறனாளர்கள் இல்லம் சென்றார்.

அந்த இல்லத்தில் சிறப்பிக்கப்பட்ட குடும்ப நாளுக்கு நன்றி தெரிவித்த திருத்தந்தை, ஆண்டவரோடுள்ள ஒன்றிப்பில், வாழ்வின் அழகிலும், கனவுகளிலும் நம்பிக்கை வைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

குடும்ப உறுப்பினர்கள் உதவ இயலாத சூழல்களிலுள்ள மாற்றுத்திறனாளர்களைப் பராமரிப்பதற்கென, 1984ம் ஆண்டில் இந்த இல்லம் ஆரம்பிக்கப்பட்டது. இத்தாலி முழுவதும் ஏறத்தாழ ஐம்பதாயிரம் பேருக்கு இந்த கூட்டமைப்பு உதவி வருகின்றது என, அதன் தலைவர் லூக்கா மிலானேசெ அவர்கள் திருத்தந்தையிடம் தெரிவித்தார்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.