2018-06-25 15:37:00

வாரம் ஓர் அலசல் – பிறப்பைச் சிறப்பாக்குவோம்


ஜூன்,25,2018. இந்த உலகில் நாம் பெருமைப்படுவதற்கு ஆயிரம் காரணங்கள் இருந்தாலும், கர்வமில்லாமல், பணிவுடன் இருப்பதுதான் பெருமைக்குரிய குணம். நாம் எல்லாரும் பிறப்பால் ஒரே மாதிரியானவர்கள்தான். ஆனால், ஒவ்வொருவரும் வாழும் முறையால், செய்யும் தொழிலால் மற்றவரிடமிருந்து வேறுபட்டு நிற்கின்றனர். எந்தத்.தொழிலிலும் உயர்வு தாழ்வு என்பது இல்லை. ஆனால், ஒருவரைப் பெருமைக்குரிய இடத்திற்குக் கொண்டுசெல்வது அவரிடம் காணப்படும் நற்பண்புகளும், அவர் செய்யும் சிறந்த செயல்களுமே. பிறப்பு தரித்திரமாக இருந்தாலும், இறப்பு சரித்திரமாகட்டும் என்பார்கள். முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் அவர்கள், நம் பிறப்பு ஒரு நிகழ்வே. அதனால் இறப்பு வரலாறாகட்டும் என்று சொன்னார். பிறப்பு எப்படியிருந்தாலும், தங்களின் அசாத்திய திறமைகளாலும், கடும் உழைப்பாலும், நற்பண்புகளாலும் பலர் வாழ்கின்றபோது சமூகத்தில் அவர்கள் உயர்ந்து சிறப்படைகின்றார்கள்.

சென்னையைச் சேர்ந்த ஆர்.பிரக்னாநந்தா (Rameshbabu Praggnanandhaa), என்ற 12 வயதுச் சிறுவன், உலகளாவிய செஸ் விளையாட்டு போட்டியில் மிகக்குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் இந்தியச் சிறுவன் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். உலக அளவில், மிகக் குறைந்த வயதில், கிராண்ட் மாஸ்டர் (Grandmaster) பட்டம் வென்ற இரண்டாவது சிறுவன் எனும் பெருமையையும் பிரக்னாநந்தா பெற்றுள்ளார். பிரக்னாநந்தா, தனது 12வயது 10 மாதங்கள், 13 நாட்களில் இந்த பட்டத்தைப் பெற்றுள்ளார். இச்சிறுவனுக்கு முன்னர், உக்ரைன்  நாட்டைச் சேர்ந்த செர்ஜி கர்ஜாக்கின் (Sergey Karjakin) என்ற சிறுவன் இப்பட்டத்தை வென்றுள்ளான். சிறுவன் செர்ஜிக்கு அப்போதைய வயது 12 வயது, 7 மாதங்கள். பட்டம் வென்ற சென்னை சிறுவன் ஆர்.பிரக்னாந்தா புதிய வரலாறு படைத்துள்ளான் என, ஊடகங்கள் பாராட்டியுள்ளன. இத்தாலியில் ஜூன் 23, இச்சனிக்கிழமையன்று நடந்த கிரிடைன் ஓபன் செஸ் போட்டியில் இறுதிச் சுற்றில் இத்தாலி வீரர் லூக்கா முரானியை வீழ்த்தி இந்தப் பெருமையை பிரக்னாநந்தா பெற்றார். 8 சுற்றுகள் முடிந்த நிலையில் இந்தப் போட்டியில் 6.5 புள்ளிகளை பிரக்னாநந்தா பெற்றுள்ளார்.  இதற்குமுன் இந்தியாவைச் சேர்ந்த பிரம்மராஜன் நெகி என்பவர், தனது 13 வயது 4 மாதங்கள் 22 நாட்களில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறுவன் பிரக்னாநந்தா, சென்னையின் பாடியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்தியாவின் திரிபுராவில், ஒரு தந்தையும் மகளும் சேர்ந்து, சரியான நேரத்தில் இரயிலை நிறுத்தி, ஆயிரக்கணக்கான பயணியரின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர் (ஜூன் 23,2018) திரிபுரா மாநில அமைச்சர், தன் வீட்டில் அவ்விருவருக்கும் விருந்தளித்து நன்றி தெரிவித்துள்ளார். திரிபுரா மாநிலத்தின், தலாய் மாவட்டத்தில் உள்ள அம்பாசா என்ற இடத்தைச் சேர்ந்தவர், 45 வயது நிரம்பிய ஸ்வபன் தேவ் வர்மா.  இவர், தன் வீட்டு அருகே உள்ள இரயில் பாதை வழியே, தன் மகள் சோமதியுடன் நடந்து சென்றார். அப்போது, பலத்த மழை பெய்தது. இதனால், அந்தப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில், இரயில் தண்டவாளம் சேதம் அடைந்தது. அப்போது, அந்த வழித்தடத்தில் பயணியர் இரயில் வந்தது. இதைப் பார்த்த ஸ்வபன் தேவ் வர்மா அவர்களும், அவரது மகளும், உடனடியாக தங்கள் சட்டைகளை கழற்றி, இரயிலை நிறுத்தும்படி, தண்டவாளத்தில் நின்று, சைகை செய்தனர். இதைப் பார்த்த இரயில் ஓட்டுனர், உடனடியாக இரயிலை நிறுத்தினார். இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இரயிலில் பயணம் செய்த, இரண்டாயிரம் பயணியர் உயிர் தப்பினர் .இதையடுத்து, ஸ்வபன் தேவ் வர்மா மற்றும் அவரது மகள் சோமதி ஆகியோர், திரிபுரா சட்டசபைக்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டனர். சட்டசபையில், அவர்களது வீரச் செயலுக்கு பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

கேரளாவில் அரசு பள்ளி ஒன்றில், மதிய உணவு திட்டத்தின் தரத்தை சோதிக்கச் சென்ற மாவட்ட ஆட்சியர் ஒருவர், மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்திய சம்பவம், பலரது பாராட்டையும் பெற்றுள்ளது. ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள நீர்குன்னம் என்ற இடத்தில், ஸ்ரீதேவி விலாசம் என்ற அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஆலப்புழா மாவட்ட ஆட்சியர் சுஹாஸ் என்பவர், இந்தப் பள்ளிக்கு, அதிரடியாக சோதனை நடத்த வந்தார். அப்போது மதிய நேரம் என்பதால், மதிய உணவு வழங்கப்படும் அறைக்குச் சென்றார். அங்கு மாணவர்கள், உணவருந்திக் கொண்டு இருந்தனர். உடனே அவர்களுடன் அமர்ந்து, சுஹாஸ் அவர்களும் உணவருந்தத் தொடங்கினார். மாவட்ட ஆட்சியர் தங்களுடன் அமர்ந்து உணவருந்துவதைக் கண்ட மாணவர்கள் உற்சாகம் அடைந்தனர். மாணவர்களுடன் உரையாடியபடி, அங்கு பரிமாறப்பட்ட சாதம், வெள்ளரிக்காய் குழம்பு, உருளைக்கிழங்கு பொறியல், மோர் ஆகியவற்றை, அவர் சாப்பிட்டார். உணவு தரமாக இருந்ததைத் தொடர்ந்து, பள்ளியில் உள்ள நுாலகம், கணிப்பொறி கூடம் ஆகியவற்றையும் பார்வையிட்டார். மேலும், மின்சாரம் தாக்கி கைகளை இழந்த இளைஞர் ஒருவருக்கு, சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, கைகள் மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளது.  ஆசியாவின் மிகப் பழமையான மருத்துவமனைகளில் ஒன்றான, சென்னை ஸ்டான்லி மருத்துவமனை, கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேல் மக்களுக்கு மருத்துவ சேவையைச் செய்துவருகிறது.

இது ஆரம்பத்தில், வட சென்னைப் பகுதி மக்களால் ‘கஞ்சித்தொட்டி மருத்துவமனை’ என அழைக்கப்பட்டது. பஞ்சம் தலைவிரித்தாடிய காலகட்டம் அது. பல இடங்களில் சிற்சில போர்களும் நடந்துகொண்டிருந்தன. போர் வீரர்களுக்கும் மக்களுக்கும் உணவளிக்க, இராயபுரத்தில் வாழ்ந்த மணியக்காரர் என்ற செல்வந்தர், தன்னுடைய தோட்டத்தில் ஒரு சத்திரத்தை கட்டினார். மணியக்காரர் 1782ம் ஆண்டில் வாழ்ந்தவர். அங்கே, பலருக்குக் கஞ்சி வழங்கினார். நாளடைவில் அந்த இடம் ‘கஞ்சித்தொட்டி’ எனப் பெயர் பெற்றது. அந்த இடத்தில் 1799ம் ஆண்டில் ‘ஜான் அண்டர்வுட்’ என்ற மருத்துவர், சிறிய மருத்துவமனையை ஆரம்பித்தார். 1808ம் ஆண்டில் அந்தச் சத்திரத்தையும் மருத்துவமனையையும் ஏற்று நடத்திய ஆங்கிலேய அரசு, 1910-ம் ஆண்டில் அரசுடைமையாக்கியது. பிறகு, ‘இராயபுரம் மருத்துவமனை’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1933-ம் ஆண்டில், அப்போது சென்னை மகாண ஆளுநராக இருந்தவர் ஜார்ஜ் ஃபிரெடரிக் ஸ்டான்லி (Sir George Frederick Stanley), இங்கே, மருத்துவக் கல்லூரியை ஆரம்பித்தார். அதன் பிறகு, ‘அரசு ஸ்டான்லி மருத்துவமனை’யாக உருமாற்றம் அடைந்தது.

மதம் பார்க்காமல் பிற மதங்களுக்கும் சேவைசெய்யும் மக்கள் பற்றிய செய்தியை கடந்தவாரத்தில் செய்திகளில் வாசித்தோம். புதுச்சேரி ரயில்வே நிலையம் அருகே ஸ்ரீ கௌசிக பாலசுப்பிரமணியர் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு ல் அனைத்து மதத்தினரும் வருகின்றனர். இக்கோயிலை கட்டியவர் முகமது கௌஸ். அவருக்கு பிறகு இக்கோயில் நிர்வாகிகளாக இவரது குடும்பத்தினர் உள்ளனர். இக்கோயிலை கட்டிய முகமது கெளஸ் அவர்கள், மறைவுக்கு பிறகு இக்கோயிலை அவரது குடும்பத்தினர் நிர்வகித்து வருகின்றனர்.  கோயில் நிர்வாகிகளில் ஒருவராக கெளஸின் மகனான காதர் இருக்கிறார். தந்தைக்கு பிறகு கோயில் பொறுப்பை எடுத்து செய்து வருவதாகவும், கோயிலில் அனைத்து திருவிழாக்கள், பூஜைகளை சரியாகச் செய்து வருவதாகவும் அவர் குறிப்பிடுகிறார். புதுச்சேரியில் முஸ்லிம்கள் நிர்வகித்து வரும் முருகன் ஆலயத்தின் கும்பாபிஷேகம் 16 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடைபெற்றுள்ளது.

மதத் தீவிரவாதம் பரவிவரும் இக்காலத்தில், மதங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் மக்களும், அதுவும் நம் தமிழ் மக்களில் உள்ளனர் என்பது பெருமைப்பட வேண்டிய விடயம். அன்பு உள்ளங்களே, எல்லாரும் உங்களோடு மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள் என்றால், நீங்கள் உங்கள் வாழ்வில் நிறையக் காரியங்களை விட்டுக்கொடுத்து இணக்கமாகச் சென்றீர்கள் எனச் சொல்லலாம். ஆனால், நீங்கள் எல்லாரோடும் மகிழ்ச்சியாக இருக்கின்றீர்கள் என்றால், நீங்கள் பிறரின் பல தவறுகளைக் கண்டுகொள்ளாமல் விட்டீர்கள் எனச் சொல்லலாம் என வாட்சப்பில் ஒரு பகிர்வு இருந்தது. உலகில் பல்வேறு இடங்களில் பலர் தம் வாழ்வால் இந்தப் பூமியைச் சிறப்புசெய்து வருகிறார்கள். நாமும் இவர்களில் ஒருவராக இணைவோம். நம் பிறப்பு எப்படியிருந்தாலும், நம் வாழ்வால், இப்பூமியைச் சிறப்பாக்குவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.