2018-06-25 15:52:00

ஒவ்வொரு மனிதரிலும் கடவுளின் முத்திரை உள்ளது


ஜூன்,25,2018. பெற்றோரின் உன்னதமான பணி, ஒவ்வொரு குடும்பத்தையும் வாழ்வின் திருத்தலமாக அமைக்கின்றது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் கூறினார்.

இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட புனித திருமுழுக்கு யோவானின் பிறப்பு விழா மற்றும், இவ்விழா திருப்பலியின் நற்செய்தி வாசகத்தை மையப்படுத்தி, மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, பெற்றோர், பிள்ளைகளைப் பெற்றெடுக்கையில், கடவுளின் உடன்உழைப்பாளர்களாக எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பது பற்றி விளக்கினார்.

வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு ஆற்றிய உரையில், ஒவ்வொரு மனிதரிலும், வாழ்வின் ஊற்றாகிய கடவுளின் முத்திரை பதிக்கப்பட்டுள்ளது என்றும், குழந்தைகளைப் பெற்றெடுக்கையில், பெற்றோர், மிகச் சிறந்த பணியை உண்மையாகவே ஆற்றுகின்றனர் என்றும், திருத்தந்தை  கூறினார்.

வயது முதிர்ந்த எலிசபெத்-செக்கரியா தம்பதியருக்கு, புனித திருமுழுக்கு யோவான் பிறந்தது பற்றியும் விளக்கிய திருத்தந்தை, கடவுள் நம் மனிதத் திறமையை நம்பி இருப்பதில்லை என்றும், கடவுளின் பேருண்மையில் நம்பிக்கை வைத்து, அவரின் பணியை தாழ்ச்சியிலும், அமைதியிலும் தியானிக்க வேண்டும் என்றும் கூறினார்.

புனித திருமுழுக்கு யோவானின் பிறப்பில் ஏற்பட்ட வியப்பு, மகிழ்ச்சி, நன்றி ஆகிய உணர்வுகள் பற்றிப் பேசிய திருத்தந்தை, நம் ஒவ்வொருவர் வாழ்விலும் இத்தகைய உணர்வுகள் ஏற்படுகின்றனவா என்ற கேள்வியை எழுப்பியதோடு, கடவுளுக்கும், அவரின் அருள் நம்மில் செயல்படுவதை உணர்வதற்கும் திறந்த மனதுள்ளவர்களாய் இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.

மேலும், பரகுவாய் நாட்டில் முத்திப்பேறுபெற்றவராக அறிவிக்கப்பட்டுள்ள, கார்மேல் சபை அருள்சகோதரி Maria Felicia de Jesus Sacramentado அவர்கள், இளையோர்க்கு எடுத்துக்காட்டாய் இருக்கின்றார் என்று, மூவேளை செப உரையின் இறுதியில் திருத்தந்தை கூறினார்.

இன்னும், இஞ்ஞாயிறன்று திருத்தந்தை வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், புனித திருமுழுக்கு யோவான் போன்று, கிறிஸ்தவர்கள், தங்களையே தாழ்த்திக்கொள்ள வேண்டும், அதன்வழியாக, ஆண்டவர் அவர்களின் இதயங்களில் வளர முடியும் என்ற சொற்களை வெளியிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.