2018-06-25 15:11:00

உலகை மதிப்பது மனித உடலை மதிப்பதிலிருந்து தொடங்குகின்றது


ஜூன்,25,2018. மனித வாழ்வின் எல்லா நிலைகளிலும் அதன் நன்னெறி மற்றும் ஆன்மீகத் தன்மையை நோக்குவதற்கு, மனித சுற்றுச்சூழல் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திங்களன்று திருப்பீடத்தில் தான் சந்தித்த குழு ஒன்றிடம் கூறினார்.

திருப்பீட வாழ்வுக் கழகம் இத்திங்களன்று தொடங்கியுள்ள கூட்டத்தில் கலந்துகொள்ளும் ஏறத்தாழ 300 பிரதிநிதிகளை, வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை,  தாராளமயமாக்கப்பட்ட உலகின் பரந்த சூழலில், மனித வாழ்வின் நிலை பற்றிய தன் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார்.

மனிதர் பற்றிய அறிவியல் ஆய்வு முக்கியமானது எனினும், மனிதரின் தொடக்கநிலையின் உண்மைத்தன்மையோடு அந்த ஆய்வு ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்றுரைத்த திருத்தந்தை, மனிதரின் மாண்பு குறித்து பேசினார்.

தனிமை மற்றும் போர்களின் சூழல்களை குழந்தைகள் எதிர்கொள்கின்றபோதும்,  வயதானவர்கள் கைவிடப்படும்போதும், அவற்றை நோக்காமல், நாம் மரணத்தின் கீழ்த்தரமான வேலையை செய்துகொண்டிருக்கின்றோம் என்றுரைத்த திருத்தந்தை, பாவத்தால் ஆற்றப்படும் இத்தகைய வேலைகளுக்கு எதிராக கிறிஸ்தவர்கள், துணிந்து செயல்படுமாறு வலியுறுத்தினார்.

வாழ்வின் இறுதிக்கதி பற்றியும் உரையாற்றிய திருத்தந்தை, மனித சமுதாயம், மரணத்திற்குப்பின், கடவுளின் வாழ்வோடு பகிர்ந்துகொள்ள வேண்டிய இறுதிக்கதியைக் கொண்டுள்ளது என்ற சிந்தனைக்கு, கிறிஸ்தவ ஞானம் உதவ வேண்டும் என்றும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.