2018-06-23 16:11:00

தகவல்தொடர்பு செயலகம், தகவல்தொடர்பு துறையாக..


ஜூன்,23,2018. அத் லிமினா சந்திப்பையொட்டி, ஹாங்காங் மற்றும் மக்காவோ ஆயர்களை, இச்சனிக்கிழமையன்று வத்திக்கானில் சந்தித்து கலந்துரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், திருப்பீட தகவல்தொடர்பு செயலகம், ஜூன் 23, இச்சனிக்கிழமை முதல், திருப்பீட தகவல்தொடர்பு துறையாக இயங்கும் என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்துள்ளார்.

திருப்பீட செயலகத்தின் பொதுவிவகாரத் துறையின் நேரடிப் பொதுச்செயலர் பேராயர் ஆஞ்சலோ பெச்சு அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்தவேளையில் (பிப்.27,2018), திருப்பீட தகவல்தொடர்பு செயலகத்தின் பெயர்மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பீட சீர்திருத்தத்தில், திருத்தந்தைக்கு ஆலோசனை அளிக்கும் C9 எனப்படும் கர்தினால்கள் அவை வழங்கிய ஆலோசனையின்பேரில், திருப்பீட தகவல்தொடர்பு செயலகத்தை, "திருப்பீட தகவல்தொடர்பு துறை"யாக மாற்றியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தந்தையின் இந்த அறிவிப்பு, திருப்பீட செய்தித்தாள் லொசர்வாத்தோரே ரொமானோவிலும், Acta Apostolicae Sedisலும் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வத்திக்கான் வானொலி, வத்திக்கான் தொலைக்காட்சி மையம், வத்திக்கான் நூல் வெளியீட்டு அலுவகம், திருப்பீட சமூகத்தொடர்பு அவை, திருப்பீட செய்தி தொடர்பகம், புகைப்பட அலுவலகம், வத்திக்கான் வலைத்தள அமைப்பு, வத்திக்கான் அச்சகம், லொசர்வாத்தோரே ரொமானோ போன்ற ஊடக அமைப்புகள், திருப்பீட தகவல்தொடர்பு துறைக்குள் உள்ளன. 2015ம் ஆண்டு ஜூன் 27ம் நாளன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பீட தகவல்தொடர்பு செயலகத்தை உருவாக்கினார்.   

மேலும், ஜூன் 26, வருகிற செவ்வாயன்று, பிரான்ஸ் நாட்டு அரசுத்தலைவர் Emmanuel Macron அவர்கள், வத்திக்கானில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.