2018-06-23 16:56:00

இமயமாகும் இளமை – பிறந்தநாள் சொல்லித்தரும் பாடங்கள்


ஜூன் 24, இஞ்ஞாயிறன்று, திருமுழுக்கு யோவானின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறோம். மன்னன் ஆனாலும் சரி, மதத்தலைவர்கள் ஆனாலும் சரி, மனதில் தோன்றிய உண்மையை அஞ்சாமல் கூறிய இளம் இறைவாக்கினர் திருமுழுக்கு யோவான். மனிதராய்ப் பிறந்தவர்களுள் யோவானைவிடப் பெரியவர் ஒருவருமில்லை (லூக்கா 7:28) என்று இயேசுவால் புகழப்பட்ட புனிதர் இவர். திருஅவையில், மூவருக்கு மட்டும், மண்ணுலகில் அவர்கள் பிறந்தநாட்கள் கொண்டாடப்படுகின்றன. இயேசுவின் பிறந்தநாள், அன்னை மரியாவின் பிறந்தநாள், திருமுழுக்கு யோவானின் பிறந்தநாள்.

இயேசுவின் பிறந்த நாளும், யோவானின் பிறந்தநாளும் கொண்டாடப்படும் நாட்கள் சிந்தனைகளை எழுப்புகின்றன. ஜூன் 24, யோவானின் பிறந்தநாள். டிசம்பர் 25, இயேசுவின் பிறந்தநாள். நமது பூமிக்கோளம், சூரியனைச் சுற்றி வரும் பாதையில், இவ்விரு நாட்களும் குறிப்பிடத்தக்கவை. பகல் பொழுது மிகவும் நீண்டுள்ள நாள், ஜூன் 24. பகல் பொழுது மிகவும் குறைந்துள்ள நாள் டிசம்பர் 24 என்று பழங்காலத்தில் கணக்கிட்டனர். ஜூன் 24 துவங்கி, பகல் நேரம் சிறிது, சிறிதாகக் குறைந்துவரும். டிசம்பர் 24க்குப் பின், பகல் நேரம் மறுபடியும் அதிகரிக்க ஆரம்பிக்கும்.

இயேசு என்ற ஆதவன் உலகிற்கு வந்ததால், இனி பகல் நேரம் கூடுதலாகும் என்பதைக் காட்ட டிசம்பர் 25ம் தேதி, கிறிஸ்து பிறந்த நாளாகக் குறிக்கப்பட்டது. அந்த ஆதவன் உதிப்பதற்காய் தான் தேயவேண்டும் என்று சொன்ன திருமுழுக்கு யோவான் பிறந்த நாள் ஜூன் 24ம் தேதி கொண்டாடப்படுகிறது. இன்று முதல், பகல் நேரம் குறைந்து வருவதுபோல், திருமுழுக்கு யோவானும் தான் தேய்ந்து, இயேசு என்ற ஆதவன் உதயமாகக் காரணமாய் இருந்தார் என்ற எண்ணங்களைக் குறிக்கவே, ஜூன் 24 மற்றும் டிசம்பர் 25 ஆகிய நாட்கள், யோவான், இயேசு ஆகியோரின் பிறந்தநாள்களாகத் திருஅவையால் தேர்ந்தெடுக்கப்பட்டன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.