2018-06-23 16:29:00

2030ம் ஆண்டுக்குள் பசியை ஒழிப்பதற்கு காரித்தாஸ் ஆசியா


ஜூன்,23,2018. தெற்கு ஆசியாவில் 2030ம் ஆண்டுக்குள், மக்களின் பசியை அகற்றுவதற்கு,  "Safbin" எனப்படும் புதிய திட்டத்தில் இறங்கியுள்ளது, ஆசிய காரித்தாஸ் அமைப்பு.

பாங்காக் நகரில் நடைபெற்ற ஆசிய காரித்தாஸ் அமைப்பின் கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட இத்திட்டத்தில், இந்திய துணைகண்டத்திலுள்ள பங்களாதேஷ், இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் குறுநில விவசாயிகளுக்கு உதவுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

காரித்தாஸ் ஆஸ்ட்ரியா, காரித்தாஸ் சுவிட்சர்லாந்து ஆகிய இரு அமைப்புகளின் உதவியுடன் இத்திட்டத்தை மேற்கொண்டுவரும் ஆசிய காரித்தாஸ் அமைப்பு, 7,500 குடும்பங்களுக்கும், நாற்பதாயிரம் மக்களுக்கும் உதவும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.

இந்தியாவில் மத்திய பிரதேச மாநிலத்தின் மூன்று மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், சாகர் மறைமாவட்டத்தில் 27 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டு, 286 கிராமங்களில் செயல்பட்டுவரும் மனித முன்னேற்ற கழகத்திற்கு முதலில் இத்திட்டம் உதவிகளை வழங்கும் என்றும் செய்திகள் கூறுகின்றன. "Safbin" திட்டம் பற்றிப் பேசிய, ஆசிய காரித்தாஸ் அமைப்பின் பொதுச்செயலர் Christoph Schweifer அவர்கள், இத்திட்டம் சவால் நிறைந்தது எனினும், கடின உழைப்பின் வழியாக இதனை நிறைவேற்றலாம் என்று தெரிவித்தார்.

ஆதாரம் : AsiaNews /  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.