2018-06-22 11:00:00

பிறரன்பு செயல்களைப் பார்த்து உலகம் நம்பும்


ஜூன்,21,2018. உலக கிறிஸ்தவ சபைகளின் அவை தன் எழுபதாம் ஆண்டை சிறப்பிப்பதையொட்டி, எழுபது என்ற எண்ணின் முக்கியத்துவத்தை விவிலியத்தில் பார்த்தோம் என்றால், இரு முக்கிய இடங்களை நற்செய்தியில் காண்கிறோம். எத்தனை முறைகள் மன்னிப்பது என்பது எண்களின் ஓர் எல்லைக்கு உட்பட்டதல்ல, மாறாக, தொடர்ந்து கொண்டேயிருக்க வேண்டியது என்பதைக் குறிக்கும் விதமாக, ' ஏழு முறை மட்டுமல்ல, எழுபது தடவை ஏழுமுறை' என இயேசு கூறுவதைக் காண்கிறோம். இன்னொரு பகுதியாக லூக்கா நற்செய்தி 10ம் பிரிவின் முதல் பகுதியில், இயேசு நியமித்து அனுப்பிய சீடர்களின் எண்ணிக்கையை நோக்குகிறோம். இந்த சீடர்களின் எண்ணிக்கை, தொடக்க நூலின் 10ம் பிரிவில் கூறப்பட்டிருக்கும் மக்களின் எண்ணிக்கையைக் குறிப்பதாக உள்ளது.

நமக்கு இன்று உன்மையிலேயே தேவைப்படுவது, நற்செய்தி அறிவுரையின்படியான வாழ்க்கைமுறை. கிறிஸ்துவைக் குறித்து அறியாதவர்களுக்கு நற்செய்தியின் மகிழ்வை எடுத்துரைக்க வேண்டிய தேவை உள்ளது. மறைப்பணிக்கான தாகம் நம்மில், அதிகரிக்கும்போது, அது நம்மை ஒன்றிப்பை நோக்கி இட்டுச்செல்லும் என்பது என் நம்பிக்கை. இந்நாளின் கொண்டாட்டங்களுக்கு என எடுக்கப்பட்டுள்ள, 'நடப்போம், செபிப்போம், ஒன்றிணைந்து பணியாற்றுவோம்' என்ற தலைப்பு குறித்து கருத்துக்களை முன்வைக்க விரும்புகிறேன்.

உள்ளேயும் வெளியேயும் நாம் நடைபோடவேண்டியுள்ளது. இயேசு எனும் திராட்சைக்கொடியில் இணைந்திருப்பது மட்டுமல்ல, பிறரை அதில் இணைத்து வைத்திருக்கவும் நாம் உதவ வேண்டியுள்ளது. துன்புறும் நம் சகோதர சகோதரிகளுக்கு நற்செய்தியின் மகிழ்வைக்கொணர, அவர்களை நோக்கி நாம் நடைபோட வேண்டியுள்ளது.

'வானகத்திலுள்ள எம் தந்தாய்' என்ற செபத்தை நாம் செபிக்கும்போது, இறைவனின் குழந்தைகளாக மட்டுமல்ல, அயலவர்களுடன் சகோதரர் சகோதரிகளாக நாம் உணர்கிறோம்.

ஒன்றிணைந்து பணியாற்றுவது என்பதை நோக்கும்போது, கடந்த காலத்தின் ஒன்றிப்புப் பாதையில் வழங்கப்பட்டுள்ள பங்களிப்பிற்கு இறைவனுக்கு நன்றி கூறுவோம். ஏழ்மை, போர், மற்றும் ஒதுக்கி வைக்கப்படுதல் போன்றவைகளால் துன்புறும் மக்களுக்கு உதவுவதைப் பொறுத்தே, நற்செய்தி மீது பிறரின் நம்பிக்கை பிறக்கிறது. இத்துன்புறுவோருக்கு உதவுவதை ஒரு சவாலாக எடுத்துக் கொள்வோம். உலகின் பல்வேறு இடங்களில், குறிப்பாக, மத்தியக்கிழக்குப் பகுதியில், கிறிஸ்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காகத் துன்பங்களை அனுபவிக்கும் மக்கள் குறித்து சிந்திப்போம். இவைகள் குறித்து மனம் தளராமல், அவர்களுக்கு நெருக்கமாகச் செல்வோம். மற்றவர்களின் தேவை குறித்து பாராமுகமாக இருப்பது இன்று பெரும் பிரச்சனையாக உள்ளது. கடவுள் பல கொடைகளால் தங்களை ஆசீர்வதிப்பதை பெருமையாக எண்ணாமல், மற்றவர்களுக்கு உதவுவதற்கான வாய்ப்பாக நோக்குவோம். நாம் ஒன்றிணைந்து நம் அயலவர்களுக்கு எவ்வகையில் உதவ முடியும் என்பது குறித்து சிந்திப்போம். நெருங்கிய சகோதரத்துவத்திலும், உறுதியான பிறரன்பிலும் இவர்களுக்கான திட்டங்களை வகுப்போம்.

ஒன்றினைந்து நடப்போம், செபிப்போம், பணியாற்றுவோம், அதன் வழியாக ஒன்றிப்பும் பிறக்கும், அதைப் பார்க்கும் உலகும் நம்பும். இவ்வாறு கிறிஸ்தவ ஒன்றிப்பு கூட்டத்தில் தன் உரையை நிறைவு செய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.