2018-06-22 16:13:00

கீழை வழிபாட்டுமுறை திருஅவைகள் நற்செய்திக்குச் சான்று பகர..


ஜூன்,22,2018. திருத்தூதர்களின் தொடக்ககால வாழ்வுக்கு உயிருள்ள சான்றுகளாக வாழ்கின்ற கீழை வழிபாட்டுமுறை கத்தோலிக்கத் திருஅவைகள், அச்சபையினர் வாழ்கின்ற எல்லா இடங்களிலும், தங்களின் அன்றாட வாழ்வில் இறைவாக்குப் பிரசன்னத்தைக் கண்டுகொள்வதற்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று கூறினார்.

கீழை வழிபாட்டுமுறை கத்தோலிக்கத் திருஅவைகளின் பணிகளுக்கு உதவும் ROACO எனப்படும் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதன் ஐம்பதாம் ஆண்டையொட்டி, ஜூன் 19, இச்செவ்வாய் முதல், ஜூன் 22, இவ்வெள்ளிக்கிழமை வரை உரோமையில் கூட்டம் நடத்திய அந்த அமைப்பின் நூறு பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசினார் திருத்தந்தை.

ROACO அமைப்புக்கு திருத்தந்தை ஆற்றவிருந்த உரையின் பிரதிகள், அவர்களிடம் கொடுக்கப்பட்டன.

கடந்த ஐம்பது ஆண்டுகளில் இத்திருஅவைகளுக்கு கடவுள் ஆற்றிய நன்மைகளுக்கு நன்றி தெரிவிக்குமாறு கூறியத் திருத்தந்தை, கிழக்கு ஐரோப்பாவில் இடம்பெற்ற சர்வாதிகார ஆட்சிகள் உட்பட, மத்திய கிழக்கில் முடிவில்லாமல் இடம்பெற்றுவரும் பிரச்சனைகள் பற்றியும் குறிப்பிட்டார்.

போர்கள் மற்றும் மக்களின் புலம்பெயர்வுகளில் இத்திருஅவைகளுக்கு காட்டப்பட்ட ஒருமைப்பாட்டுணர்வு, அத்திருஅவைகள் தொடர்ந்து அப்பகுதிகளில் இருப்பதற்கு உதவியுள்ளன என்றுரைத்த திருத்தந்தை, புலம்பெயர்ந்து வாழ்கின்ற இத்திருஅவைகளின் உறுப்பினர்கள், தாங்கள் வாழும் நாடுகளில் இயேசுவின் நற்செய்திக்குச் சான்றுகளாக விளங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.