2018-06-22 14:19:00

இமயமாகும் இளமை .........: மக்கள் பாராட்டைவிட உயர்ந்தது எது?


2012ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி நள்ளிரவு,16ம் தேதி அதிகாலை எழிலகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அப்போது சென்னை மத்திய கோட்ட தீயணைப்பு அதிகாரி பிரியா இரவிச்சந்திரன் உள்ளே நுழைந்து கோப்புகளைப் பாதுகாக்க முயல, எதிர்பாராதவிதமாக தீயில் சிக்கி உடல் முழுவதும் பலத்த தீக்காயங்களுடன் உடன் இருந்த அதிகாரிகளால் காப்பாற்றப்பட்டார். இந்தியாவின் முதல் பெண் கோட்ட தீயணைப்பு அதிகாரியான இவர், இன்று வரை தீக்காயங்களுக்காக சிகிச்சை எடுத்து வருகிறார். சென்னை தீ விபத்தில் பலத்த காயம் அடைந்த தீயணைப்பு கோட்ட அதிகாரி பிரியா இரவிச்சந்திரன், எதற்கும் அஞ்சாத துணிச்சல் மிக்கவர். மேற்கு மாம்பலத்தில், திரைப்பட டம்மி குண்டுகள் வெடித்து விபத்து ஏற்பட்டபோது, இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளுக்குள் பயமில்லாமல் சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டதை அந்தப் பகுதி மக்கள் இன்றும் பாராட்டுகிறார்கள். இதுபோல், 2016ம் ஆண்டு சுழன்று அடித்த வார்தா புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, மரங்களெல்லாம் வேரோடு சாய்ந்துவிட்ட நிலையில், அப்போதும் சீரமைப்பு விரைவு நடவடிக்கைகளின் பின்னணியில் சென்னை மாநகராட்சியுடன் கைகோர்த்திருந்தது தீயணைப்புத் துறை. இங்கும் தலைமை தாங்கி வழி நடத்தியவர், சென்னை தீயணைப்பு அதிகாரி பிரியா இரவிச்சந்திரன். ‘எங்கள் பணியை அங்கீகரித்து, மக்கள் பாராட்டுவதைக் காட்டிலும் வேறென்ன பரிசு வேண்டும்?’ என்று கேட்கிறார், இந்த கடமையுணர்வுள்ள தீயணைப்பு அதிகாரி பிரியா இரவிச்சந்திரன்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.