2018-06-21 17:17:00

ஜெனீவா கிறிஸ்தவ ஒன்றிப்பு திருத்தூதுபயண விளக்கம்


ஜூன்,21,2018. சேர்ந்து செபித்தல், சேர்ந்து நடத்தல், சேர்ந்து பணியாற்றுதல் ஆகியவை, கிறிஸ்தவ ஒன்றிப்புக்கு இட்டுச் செல்லும் முக்கிய பாதை. இந்த வார்த்தைகளை ஜூன் 21, இவ்வியாழனன்று தன் டுவிட்டரில் வெளியிட்டு, சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகருக்கு, ஒரு நாள் கிறிஸ்தவ ஒன்றிப்பு திருத்தூதுபயணத்தை மேற்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ். வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்திலிருந்து, இவ்வியாழன் காலை 7.50 மணிக்கு காரில் புறப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் பியூமிச்சினோ பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து காலை 8.30 மணிக்கு ஜெனீவாவுக்குப் புறப்பட்டார். இத்தாலிய அரசுத்தலைவர் செர்ஜோ மத்தரெல்லா அவர்களுக்கு, செபமும் வாழ்த்தும் நிறைந்த தந்திச் செய்தி ஒன்றையும் திருத்தந்தை அனுப்பினார். WCC எனப்படும் உலக கிறிஸ்தவ சபைகள் மன்றம் தொடங்கப்பட்டதன் எழுபதாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, இத்திருத்தூதுபயணத்தை மேற்கொள்வதாகவும், ஜெனீவாவில் கத்தோலிக்க சமூகத்தையும், சிறப்பாக, பிற கிறிஸ்தவ சபைகளுடன் உரையாடல்களை ஊக்குவிக்கும் நோக்கத்திலும் இப்பயணத்தை மேற்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். இச்செய்திக்கு நன்றி தெரிவித்து பதில் அனுப்பியுள்ள அரசுத்தலைவர் மத்தரெல்லா அவர்கள், இந்த கிறிஸ்தவ ஒன்றிப்பு பயணம், பல்வேறு கிறிஸ்தவ சபைகளிடையே ஒன்றிப்பு ஏற்படுவதற்கான தேடலில், பலனுள்ள உரையாடலையும், ஒத்துழைப்பையும் ஊக்குவிப்பதாயும், அதேநேரம், அமைதி மற்றும் ஒருமைப்பாட்டுக்கு உலகினருக்கு விடுக்கும் அழைப்பைப் புதுப்பிப்பதாயும் உள்ளது என்று குறிப்பிட்டு, இத்தாலிய மக்கள் சார்பாக, தன் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். மேலும், ஒரு மணி நாற்பது நிமிட நேர இந்த விமானப்பயணத்தில், தன்னோடு பயணம் மேற்கொண்ட, பன்னாட்டு செய்தியாளர்களுக்கு வாழ்த்தும், அவர்களின் பணிக்கு நன்றியும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

AZ 4000 ஆல்இத்தாலியா விமானத்தில் பயணம் செய்த திருத்தந்தை, இவ்வியாழன் காலை 10 மணி 5 நிமிடங்களுக்கு ஜெனீவா பன்னாட்டு விமான நிலையத்தைச் சென்றடைந்தார்.  சுவிட்சர்லாந்து கூட்டமைப்பின் தலைவர் Alain Berset, சுவிட்சர்லாந்து இவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ சபை கூட்டமைப்பின் தலைவர் Gottfried Locher, முன்னாள் இரு சுவிஸ் கார்ட்ஸ் ஆகியோர் திருத்தந்தையை வரவேற்றனர். ஒரு சிறுவனும், ஒரு சிறுமியும், மரபு உடைகளில் மலர்கள் அளித்து திருத்தந்தையை வரவேற்றனர். சிவப்பு கம்பள வரவேற்பும், அரசு மரியாதையும் அளிக்கப்பட்டன. அதன்பின்னர், விமான நிலையத்தில் முக்கிய வரவேற்பறையில் Alain Berset அவர்களுடன் ஏறத்தாழ இருபது நிமிடம் கலந்துரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ். சுவிஸ் கார்ட்ஸ் எனப்படும் திருத்தந்தையரின் மெய்காப்பாளர்கள், முதன்முதலில் (மார்ச்,1507) உரோம் வந்ததைக் குறிக்கும் அழகான ஓவியம் ஒன்றை, அரசுத்தலைவருக்குப் பரிசாக அளித்தார் திருத்தந்தை. அதன் பின்னர், 11.15 மணிக்கு, உலக கிறிஸ்தவ சபைகள் மன்ற மையத்தில், மரம் மற்றும் கண்ணாடியால் நவீனமுறையில் அமைக்கப்பட்ட அறையில், கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வழிபாடு நடைபெற்றது. இவ்வழிபாட்டில், ஜெர்மனி, பிரிட்டன், தென்னாப்ரிக்கா போன்ற நாடுகளிலிருந்தும் பாடல்கள் பாடப்பட்டன. ஆங்கலிக்கன், மெத்தடிஸ்ட், லூத்தரன், ஆர்த்தடாக்ஸ் போன்ற கிறிஸ்தவ சபை பிரதிநிதிகள் திருத்தந்தையை வாழ்த்தினர். WCC உலக கிறிஸ்தவ சபைகள் மன்றத்தில், 350, பிரிந்த கிறிஸ்தவ சபைகள், ஆர்த்தடாக்ஸ் சபைகள் மற்றும் ஆங்லிக்கன் சபைகள் உள்ளன. இவற்றில் ஏறக்குறைய ஐம்பது கோடி கிறிஸ்தவர்கள் உள்ளனர். இச்செப வழிபாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மறையுரையாற்றினார். இக்கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வழிபாட்டின் நிறைவில், அந்த ஆலயத்திற்கு திருச்சிலுவை ஒன்றை பரிசாக அளித்தார் திருத்தந்தை. இச்சிலுவை, Alberto Ghinzani என்ற இத்தாலிய சிற்பியால், 1990ம் ஆண்டில், ஒரே செப்புத்துண்டிலிருந்து செதுக்கப்பட்டது. இச்செப வழிபாட்டிற்குப் பின்னர், Bossey கிறிஸ்தவ ஒன்றிப்பு நிறுவனத்தில், WCC மன்றத் தலைவர்களுடன் மதிய உணவு அருந்தினார் திருத்தந்தை பிரான்சிஸ். Bossey கிறிஸ்தவ ஒன்றிப்பு நிறுவனம், ஜெனீவா நகரிலிருந்து ஏறக்குறைய 25 கிலோ மீட்டர் தூரத்தில் கிராமப்புறத்தில் அமைந்திருக்கின்றது. 1946ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனத்தில், உலகின் பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் பின்னணிகளைக்கொண்ட பல்வேறு கிறிஸ்தவ சபைகளைச் சார்ந்தவர்களுக்கு, ஒவ்வோர் ஆண்டும் பயிற்சி அளிக்கப்படுகின்றது. Bossey மையத்திற்கு திருத்தந்தையின் திருத்தூதுப்பயண பதக்கத்தைப் பரிசாக வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.