2018-06-20 14:49:00

மறைக்கல்வியுரை : வாழ்வை சீர்படுத்தற்கான அழைப்பே இறைக்கட்டளை


ஜூன்,20,2018. கோடை காலம் துவங்கி விட்டது என்பதை நேரடியாகவே உணர முடிகின்ற வகையில் சூரிய வெப்பத்தின் தாக்கம் இருந்தாலும், திருப்பயணிகளின் எண்ணிக்கையை மனதில்கொண்டு, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்திலேயே புதன் மறைக்கல்வி உரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இருப்பினும், வெயிலிலிருந்து காப்பாற்றிக்கொள்ளும் விதமாக, நோயுற்றோர் மட்டும் அருளாளர், திருத்தந்தை 6ம் பவுல் மண்டபத்தில் அமரவைக்கப்பட்டிருக்க, அவர்களை முதலில் சென்று சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். 'உங்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதற்காகவே இந்த அரங்கிற்கு வந்தேன். இந்த மறைக்கல்வி போதனையின்போது, தூய பேதுரு வளாகத்தில் குழுமியிருப்போருடன் நீங்களும் பெரிய தொலைக்காட்சி திரை வழியாக இணைந்திருங்கள். நான் உங்களுக்காகச் செபிக்கிறேன். நீங்களும் எனக்காகச் செபியுங்கள். இப்போது ஒன்றிணைந்து, ‘அருள் நிறைந்த மரியே’  என்ற செபத்தைச் செபிப்போம்'  என உரைத்த, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  நோயுற்றோரோடு இணைந்து அச்செபத்தை செபித்தபின், அங்கிருந்து தூய பேதுரு வளாகம் சென்று, தன் புதன் மறைக்கல்வி உரையைத் துவக்கினார்.

அன்பு சகோதர சகோதரிகளே, இறைக் கட்டளைகள் குறித்த நம் மறைக்கல்வி தொடரில், இறைவனின் மனுவுருவான வார்த்தையாம் இயேசு, சட்டத்தை அழிப்பதற்கல்ல, மாறாக, நிறைவேற்றவே வந்தார் என்பதை கடந்த வாரத்தில் நோக்கினோம். இறைவனின் கட்டளைகள் என்பவை, இறைவன் தம் மக்களோடு தொடர்ந்து மேற்கொள்ளும் உடன்படிக்கை உரையாடலின் ஒரு பகுதியேயாகும். எபிரேய மொழியில் பார்த்தோம் என்றால், பத்து கட்டளைகள் என்பவை, இறைவனின் பத்து வாரத்தைகள் என்றே அழைக்கப்படுகின்றன. 'வார்த்தைகள்' எனும்போது, அவை கீழ்ப்படிதலுக்கான கட்டளைகள் அல்ல, மாறாக, நம் வாழ்வைச் சீர்படுத்துவதற்கு விடப்படும் அழைப்பாகும். இந்த அழைப்பு, தூய ஆவியிலும், மகன் வழியாகவும், தந்தையோடு கொள்ளும் அன்பு உறவில் நிறைவேற்றப்பட வேண்டும். சோதனைக்கு உட்படுத்த முயலும் சாத்தான் நம்மை நம்ப வைக்க முயல்வதுபோல், நம் இறைவன், கண்மூடித்தனமான ஒரு கீழ்ப்படிதலுக்கு நம்மை அழைக்கவில்லை. மாறாக, தன் குழந்தைகளின் நலன் மீது அக்கறை கொள்ளும் ஒரு தந்தையாக நம்மை நடத்துகிறார். உண்மையான முழு மனித நிறைவுக்கான பாதையாக, இறைவனின் கட்டளையை சுதந்திரமாக ஏற்றுக்கொள்வதற்கு உதவும் தூய ஆவியின் அருளுக்கு நன்றி கூறுவோம். கிறிஸ்தவர்களாக நாம் நம் வாழ்வில், இறைக்கட்டளையை வார்த்தைக்கு வார்த்தை கடைப்பிடிப்பதைத் தாண்டி, தூய ஆவியாரின் விடுதலை நோக்கிக் கடந்து செல்கிறோம். கிறிஸ்துவின் கட்டளைக்கு கீழ்ப்படிதல் என்பது, வெறும் சட்டரீதியானது அல்ல  மாறாக, கடவுள் மீதான ஒரு குழந்தைக்குரிய அன்பின் பதிலுரையாகவும், இவ்வுலகிற்கான மீட்புத் திட்டத்தின் மீதான நம்பிக்கையுடன்கூடிய உறுதிப்பாடாகவும் உள்ளது என்பதை நம் வார்த்தைகளாலும், நடவடிக்கைகளாலும் காட்டுவோமாக.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தியா, இந்தோனேசியா, மலேசியா உட்பட பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த திருப்பயணிகளை வாழ்த்தி, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.