2018-06-20 15:13:00

புலம்பெயர்ந்துள்ள 3 கோடி சிறார்க்கு பாதுகாப்பு அவசியம்


ஜூன்,20,2018. போரினால் புலம்பெயர்ந்துள்ள ஏறத்தாழ மூன்று கோடி சிறார்க்கு உடனடி பாதுகாப்பும் அச்சிறார் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு நிலையான மற்றும், நீண்டகாலத் தீர்வுகளும் அவசியம் என்று, ஐ.நா.வின் குழந்தை நல அமைப்பான யுனிசெப் கூறியது.

புலம்பெயர்ந்தவர் உலக நாளையொட்டி இவ்வாறு விண்ணப்பித்துள்ள யுனிசெப் அமைப்பு, இரண்டாம் உலகப் போருக்குப்பின், தற்போது போரினால், பெருமெண்ணிக்கையில் சிறார் கட்டாயமாகப் புலம்பெயர்கின்றனர் என்று கூறியது.

புலம்பெயரும் மக்களுக்கு ஆதரவாக உலகளாவிய செயல்திட்டம் உருவாக்குவது குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவரும் இவ்வேளையில், உலகில் மிகவும் நலிந்தவர்களாகிய சிறாரின் உரிமைகள், அவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வில் உலகத் தலைவர்கள் அக்கறை காட்டுமாறும் யுனிசெப் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

2015 மற்றும் 2016ம் ஆண்டுகளில், ஏறக்குறைய எண்பது நாடுகளில், குறைந்தது மூன்று இலட்சம் சிறார், பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டுள்ளனர் என்றும், இவ்வெண்ணிக்கை, 2010 மற்றும் 2011ம் ஆண்டுகளில், 66 ஆயிரமாக இருந்தது என்றும், அந்த ஐ.நா. அமைப்பு கூறியது.     

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.