2018-06-20 14:51:00

தேவையில் இருக்கும் அயலவரை வரவேற்க அஞ்ச வேண்டாம்


ஜூன்,20,2018. உதவி தேவைப்படும் நம் அயலவரை வரவேற்பதற்கு அஞ்ச வேண்டாமென, உலக புலம்பெயர்ந்தவர் நாளான இப்புதன்கிழமையன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எல்லாரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜூன் 20, இப்புதனன்று, புலம்பெயர்ந்தவர் உலக நாளை ஐ.நா. நிறுவனம் கடைப்பிடித்ததையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், தன் டுவிட்டரில், ஏழைகள், புறக்கணிக்கப்பட்டோர் அல்லது புலம்பெயர்ந்தவரில் நாம் இயேசுவைச் சந்திக்கின்றோம், எனவே, தேவையில் இருக்கும் நம் அயலவரை வரவேற்கும் பாதையில்,  அச்சத்திற்கு இடமளிக்க வேண்டாமெனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இன்னும், இந்த புலம்பெயர்ந்தவர் உலக நாளில், திருத்தந்தை வெளியிட்ட மற்றுமொரு டுவிட்டர் செய்தியில், ஒரு மனிதரின் மாண்பு, அவர் குடிமகனாகவோ, புலம்பெயர்ந்தவராகவோ அல்லது குடிபெயர்ந்தவராகவோ இருப்பதில் சார்ந்து இல்லை. போர் மற்றும் துன்பங்களுக்குத் தப்பித்துவரும் மக்களைக் காப்பாற்றுவது, ஒரு மனிதாபிமானச் செயலாகும் என்ற வார்த்தைகள் பதிவாகியிருந்தன.

மேலும், இந்த புலம்பெயர்ந்தவர் உலக நாளுக்கென காணொளி செய்தி வெளியிட்டுள்ள ஐ.நா. பொதுச் செயலர் அந்தோனியோ கூட்டேரெஸ் அவர்கள், புலம்பெயர்ந்தவர்களுக்கு ஒருமைப்பாடும், பரிவிரக்கமும் காட்டப்பட்டு, அவர்களின் துன்பங்கள் களையப்பட நடவடிக்கைகள் எடுக்கப்படுமாறு வலியுறுத்தியுள்ளார்.

போர்கள் அல்லது அடக்குமுறைகளால், உலகில் ஆறு கோடியே எண்பது இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள், அதாவது தாய்லாந்து நாட்டின் மொத்த மக்கள் தொகைக்கு ஏறக்குறைய சமமான மக்கள் புலம்பெயர்ந்துள்ளனர் என்றும், இவர்களுக்கு ஆதரவு அளிப்பதற்கு முதல்படியாக, ஒன்றிப்பும் ஒருமைப்பாடும் அவசியம் என்றும் கூறியுள்ளார், கூட்டேரெஸ்.

புலம்பெயர்ந்துள்ள மக்களுக்கு நம்மால் இன்னும் என்ன செய்ய முடியும் என்பதை, புலம்பெயர்ந்தவர் உலக நாளில் சிந்திக்குமாறு அழைப்பு விடுத்துள்ள ஐ.நா. பொதுச் செயலர், இம்மக்களை ஏற்கும் நாடுகளுக்கு இவர்கள் ஆற்றிவரும் நன்மைகளை அங்கீகரித்து, இவர்களுக்கு ஆதரவு அளிக்கப்படுமாறு கூறியுள்ளார்.

ஆதாரம் : UN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.