2018-06-20 15:00:00

ஐரோப்பிய காரித்தாஸ் புதிய சமூக வலைத்தளம்


ஜூன்,20,2018. புலம்பெயர்ந்தவர் உலக நாளான இப்புதனன்று, புதிய சமூக வலைத்தளம் ஒன்றை ஆரம்பித்துள்ள ஐரோப்பிய காரித்தாஸ் அமைப்பு, மக்கள் இதில் பங்குபெறுமாறு அழைப்பு விடுத்துள்ளது.  

#whatishome என்ற இந்த சமூக வலைத்தளம் பற்றி, வத்திக்கான் செய்திகளுக்குப் பேட்டியளித்த, அந்த அமைப்பின் கொள்கை மற்றும் ஆலோசனைப் பிரிவின் இயக்குனர் Shannon Pfohman அவர்கள், இந்த திட்டத்திற்கு, ஐரோப்பிய காரித்தாசும், ஏனைய 11 ஐரோப்பிய காரித்தாசின் கிளை அமைப்புகளும் உதவியுள்ளன என்று தெரிவித்தார். இல்லங்கள் எவ்வாறு புரிந்துகொள்ளப்படுகின்றன என்பதையும், புலம்பெயர்ந்த மக்களுக்கு உதவுவது குறித்தும், இந்த வலைத்தளத்தில் மக்கள், புகைப்படங்களைப் பிரசுரிக்காலம் எனவும், தெரிவித்தார், Shannon.

மேலும், புலம்பெயர்ந்தவர் உலக நாளுக்குச் செய்தி வெளியிட்டுள்ள ஐரோப்பிய காரித்தாஸ் அமைப்பு, பாதுகாப்பு தேவைப்படும் மக்களுக்கு, நிலைத்த தீர்வை வழங்கும் ஐரோப்பாவுக்கு ஆதரவு தருவதாகத் தெரிவித்துள்ளது.

புலம்பெயர்ந்தவரின் நிலைமைகள் புரிந்துகொள்ளப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ள  அச்செய்தி, உலகின் 2 கோடியே 25 இலட்சம் புலம்பெயர்ந்தவரில் 85 விழுக்காட்டினர், வளரும் நாடுகளில் உள்ளனர் என்றும், துருக்கி நாட்டில் மட்டும் புலம்பெயர்ந்தவர்கள் 28 இலட்சம் பேர் உள்ளனர் என்றும் கூறுகிறது.

உலகின் புலம்பெயர்ந்தவர்களில் 3.3 விழுக்காட்டினர் எத்தியோப்பியாவில் உள்ளவேளை, லெபனானின் மொத்த மக்கள் தொகையில் 16.6 விழுக்காட்டினர் புலம்பெயர்ந்தவர்கள் என்று கூறியுள்ளது, ஐரோப்பிய காரித்தாஸ்.

2017ம் ஆண்டில் சட்டரீதியான பாதுகாப்பு தேவைப்பட்ட 12 இலட்சம் மக்களில் 5 விழுக்காட்டினருக்கு மட்டுமே, நிரந்தர சட்டப் பாதுகாப்பு கிடைத்தது என, UNHCR எனப்படும் ஐ.நா. புலம்பெயர்ந்தவர் அமைப்பு கூறியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.