2018-06-19 16:47:00

குவாத்தமாலா மற்றும் இந்திய வடகிழக்கு மாநிலங்களுக்கு உதவி


ஜூன்,19,2018. குவாத்தமாலா நாட்டில் எரிமலை வெடிப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென முதல் தவணையாக ஒரு இலட்சம் டாலர்களை திருத்தந்தை அனுப்ப உள்ளதாக திருப்பீடம் அறிவித்துள்ளது.

திருத்தந்தையின் பெயரால் இந்த உதவித் தொகையை அனுப்பவுள்ள ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை வெளியிட்டுள்ள அறிக்கையில், எரிமலை வெடிப்பால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி உதவிகள் வழங்கப்படவேண்டும் என்ற திருத்தந்தையின் ஆன்மீக நெருக்கத்தையும், ஒரு தந்தைக்குரிய அக்கறையையும் வெளிப்படுத்தும் விதமாக, இந்த தொகை முதல் தவணையாக அனுப்பப்படுகின்றது என உரைத்துள்ளது.

17 இலட்சம் மக்களைப் பாதித்துள்ள இந்த எரிமலை வெடிப்பால், நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர், மற்றும், ஏறத்தாழ 60 பேர் காயமடைந்துள்ளனர் எனக்கூறும் இந்த திருப்பீட அவை, குவாத்தமாலா நாட்டிற்கு உதவுமாறு, கத்தோலிக்க மறைமாவட்டங்களும் பிறரன்பு அமைப்புகளும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கிறது.

மேலும், இந்தியாவில் பருவ மழையால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள நான்கு வடகிழக்கு மாநிலங்களுக்குத் தேவையான உதவிகளை ஏனைய அமைப்புக்களுடன் இணைந்து ஆற்றி வருகிறது தலத்திருஅவை.

ஐந்து இலட்சம் பேரின் குடிபெயர்வுக்கும், 23 பேரின் உயிரிழப்புக்கும் காராணமான கன மழை மற்றும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள மிசோராம், மணிப்பூர், அஸ்ஸாம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் பல நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு அவசரகால உதவிகளை வழங்கி வருகிறனர் அப்பகுதி திருஅவை அதிகாரிகள்.

ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.