2018-06-19 16:44:00

ஆண்டுக்கு ஆண்டு புலம்பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு


ஜூன்,19,2018. உலக அளவில் புலம்பெயர்வோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துவரும்வேளை, கடந்த ஆண்டு புலம்பெயர்ந்த 6 கோடியே 85 இலட்சம் பேரில், 85 விழுக்காட்டினர், வறிய மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளைச் சேர்ந்தவர்கள் என, UNHCR எனப்படும், ஐ.நா.வின் புலம்பெயர்ந்தோர் நிறுவனம் கூறியுள்ளது.

உலக அளவில் வன்முறைகள் பரவி வருவதும், மோதல்களுக்குத் தீர்வு காணாமல் இருப்பதும், அப்பாவி பொதுமக்கள் சண்டைகளில் சிக்கி இருப்பதும், புலம்பெயர்வுகளை அதிகரித்து வருகின்றன என, UNHCR நிறுவனத்தின் தலைவர் Filippo Grandi அவர்கள் கூறினார். உலகிலுள்ள அனைத்து புலம்பெயர்ந்தோரில், எழுபது விழுக்காட்டினர், பத்து நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும், கடந்த ஏழு ஆண்டுகளாக சண்டை இடம்பெறும் சிரியாவைச் சேர்ந்தவர்களே, புலம்பெயர்ந்தோரில் அதிகம் என்றும், Grandi அவர்கள் மேலும் கூறினார்.

2017ம் ஆண்டில், புதிய ஆயுதமோதல்கள் ஆரம்பித்தது, புலம்பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு முக்கிய காரணம் என்றும் ஐ.நா. கூறியுள்ளது.

மேலும், அமெரிக்க ஐக்கிய நாட்டில் அண்மையில் அங்கீகரிக்கப்பட்டுள்ள எல்லைப் பாதுகாப்பு கொள்கைகள், புலம்பெயர்ந்துள்ள நூற்றுக்கணக்கான சிறாரை, அவர்கள் பெற்றோரிடமிருந்து கட்டாயமாகப் பிரிக்கின்றன என, ஐ.நா. மனித உரிமைகள் நிறுவனத் தலைவர் Zeid Ra’ad Al Hussein அவர்கள் கவலை தெரிவித்துள்ளார்.

ஆதாரம் : UN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.