2018-06-19 16:52:00

அனைத்து மனித உரிமைகளையும் முழுமையாய் அனுபவிப்பதற்கு...


ஜூன்,19,2018. அமைதியை அனுபவிப்பதற்கு ஒவ்வொரு மனிதருக்கும் உரிமை உள்ளது என்பதால், குடிமக்கள், நிலையான அமைதியின் பாதையைக் கண்டுகொள்வதற்கு,  அனைத்து நாடுகளும் தங்களின் கடமையையும், பொறுப்பையும் சரியாகச் செயல்படுத்துமாறு, திருப்பீடம் கேட்டுக்கொண்டுள்ளது.

அமைதியாக வாழ்வதற்கு உரிமை என்ற தலைப்பில், ஜெனீவாவில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய, ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு, திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பணியாற்றும் பேராயர் இவான் யுர்க்கோவிச் அவர்கள், நீடித்த நிலையான வளர்ச்சிக்கு அமைதி எவ்வளவு முக்கியம் என்பதை வலியுறுத்தினார்.

ஒருவரையொருவர் புரிந்துகொள்ளல் மற்றும் ஒத்துழைப்பு உணர்வில், உரையாடல் ஊக்குவிக்கப்பட்டு, மோதல்களுக்குத் தீர்வுகள் காணப்பட வேண்டுமென்று உரையாற்றிய  பேராயர் யுர்க்கோவிச் அவர்கள், அமைதி, நீதியின் கனியாக கிடைப்பது என்றும் கூறினார்.

சமய மற்றும் வாழ்வதற்கான உரிமை உட்பட, அமைதியில் வாழ்வதற்கும், அமைதியை ஊக்குவிப்பதற்கும் இருக்கின்ற உரிமை, மனித உரிமைகளைப் பாதுகாத்து ஊக்குவிப்பதன் மொத்த அமைப்பின் மையமாக நோக்கப்பட வேண்டுமென்றும், பேராயர் ஐ.நா. கூட்டத்தில் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.