2018-06-14 16:36:00

நவம்பர் 18ல் மூவாயிரம் ஏழைகளோடு திருத்தந்தை உணவு


ஜூன்,14,2018. இரண்டாவது உலக வறியோர் நாளுக்கென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள செய்தியை, இவ்வியாழனன்று செய்தியாளர் கூட்டத்தில் வெளியிட்ட புதிய வழி நற்செய்தி அறிவிப்பு அவைத் தலைவர் பேராயர் ரீனோ ஃபிசிக்கெல்லா அவர்கள், அந்த உலக நாளின் நிகழ்வுகள் பற்றியும் அறிவித்தார்.

வருகிற நவம்பர் 18ம் தேதி ஞாயிறு காலை 9.30 மணிக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், ஏழைகளையும், பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பணியாளர்களையும் சந்திப்பார், பின்னர் அவர்களுக்குத் திருப்பலி நிறைவேற்றுவார். அதன்பின்னர், அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்தின் முகப்பில் ஏறக்குறைய மூவாயிரம் ஏழைகளுடன் உணவருந்துவார். இந்நாளில் ஏழைகளுக்கு வழங்கப்படும் உணவை, 'Ente Morale Tabor' அமைப்புடன் சேர்ந்து, உரோம் நகரிலுள்ள இத்தாலிய Hilton அமைப்பு வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநாளில், பல்வேறு பங்குத்தளங்கள், தன்னார்வலர் மையங்கள், பள்ளிகள், கல்லூரிகள் போன்ற இடங்களில் ஏழைகளுக்கு உணவு வழங்கப்படும் என, பேராயர் ஃபிசிக்கெல்லா அவர்கள் அறிவித்தார்.  

நவம்பர் 17ம் தேதி சனிக்கிழமை மாலையில், உரோம் புனித இலாரன்ஸ் பசிலிக்காவில், ஏழைகள் மற்றும், பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பணியாளர்களுடன் திருவிழிப்பு செபங்கள் நடைபெறும். அன்று 600 ஏழைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்.

நவம்ப்ர 12 திங்கள் முதல் அந்த வாரம் முழுவதும், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்திற்கு அருகிலுள்ள இடத்தில் நலவாழ்வு முகாம்கள் அமைக்கப்பட்டு, ஏழைகளுக்கு, நலவாழ்வு சார்ந்த உதவிகள் வழங்கப்படும் எனவும் பேராயர் அறிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.