2018-06-14 16:24:00

இப்பிரபஞ்சம் பற்றி மேலும் அறிவதற்கு ஒருபோதும் அஞ்சக்கூடாது


ஜூன்,14,2018. வத்திக்கான் விண்வெளி ஆய்வு மையம் நடத்தும் கோடைகால பயிற்சியில் கலந்துகொள்ளும் ஏறக்குறைய அறுபது பிரதிநிதிகளை, ஜூன் 14, இவ்வியாழன் காலையில், வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல்வேறு சூழல்களைச் சார்ந்தவர்கள் ஒன்றுசேர்ந்து பணியாற்றுகையில், நம் பிரபஞ்சம் பற்றிய பொதுவான புரிந்துகொள்ளல் வளர்வதற்கு உதவ இயலும் என்று கூறினார்.

இந்தப் பெரிய பிரபஞ்சம் பற்றிய புரிந்துகொள்ளல் நாளுக்கு நாள் வளர்ந்துவரும்வேளை, பல்வேறு இடங்களிலிருந்து நாம் பெறுகின்ற அதிகளவிலான தகவல்களை எவ்வாறு சமாளிப்பது என்பதையும் கற்றுக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்று, திருத்தந்தை கூறினார்.

இணையதளம் மற்றும் சமூக ஊடகங்களின் தகவல் புரட்சிகளுக்குமுன்னும், இந்தப் பரந்து விரிந்த பிரபஞ்சத்திற்குமுன்னும், நாம் எவ்வளவு சிறியவர்கள் என நினைக்கத் தோன்றலாம், இத்தகைய நினைவு, இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்னரே எழுந்துள்ளது என்றுரைத்த திருத்தந்தை, திருப்பா 8ல், இறைவனின் மாட்சியும், மானிடரின்  மேன்மையும் (தி.பா.8,4-6) பற்றி, ஆசிரியர் வியந்து பாடியுள்ளார் என்று கூறியுள்ளார்.

நமக்கு எல்லாம் தெரியும் என ஒருபோதும் நினைக்கக் கூடாது, அதேநேரம், இந்தப் பிரபஞ்சம் பற்றி மேலும் அதிகம் கற்றுக்கொள்வதற்கும் ஒருபோதும் அஞ்சக் கூடாது என்றும், செய்வதை அன்புகூரும் மக்களாகிய நாம், இந்தப் பிரபஞ்சத்தின்மீது கொண்டிருக்கும் அன்பு, இறையன்பின் முன்சுவை எனக் கண்டுணர வேண்டும் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

பன்மைத்தன்மைகளுக்கு மத்தியில் பணிகள் ஆற்றிவருபவர்கள், உண்மை மீதும் பிரபஞ்சம் மீதும் அன்பு, ஒருவர் மீது ஒருவர் காட்டும் அன்பு ஆகியவற்றில் வளரவேண்டுமென, அந்த பயிற்சியாளர்களுக்குத் தன் வாழ்த்துக்களையும் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.   

பல்வேறு விண்மீன்கள் பற்றி நடைபெற்றுவரும் பெரிய அளவிலான கணக்கெடுப்பு என்ற தலைப்பில், வத்திக்கான் விண்வெளி ஆய்வு மையம் நடத்திவரும் கோடைகால பயிற்சி, ஜூன் 4ம் தேதி தொடங்கியது. இது, ஜூன் 29ம் தேதி நிறைவடையும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.