2018-06-13 16:18:00

உலக கோப்பை கால்பந்து போட்டி, சந்திப்பின் தருணமாக அமைய..


ஜூன்,13,2018. இரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில், ஜூன் 14, இவ்வியாழனன்று தொடங்கும், 2018ம் ஆண்டின் உலக கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடும் வீரர்கள், FIFA நிர்வாகத்தினர், சமூகத்தொடர்பு சாதனங்கள் வழியாக இப்போட்டிகளைப் பார்ப்பவர்கள் போன்ற எல்லாருக்கும், தன் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இப்புதன் காலை பத்து மணியளவில், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் அமர்ந்திருந்த பல்லாயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு, பொதுமறைக்கல்வியுரை வழங்கிய பின்னர், இவ்வாறு தன் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இந்த முக்கியமான விளையாட்டு நிகழ்வு, நாடுகள் மத்தியில் ஒருமைப்பாட்டையும் அமைதியையும் ஊக்குவித்து, பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் மதங்களுக்கு இடையே, உரையாடலையும், உடன்பிறப்பு உணர்வையும், சந்திப்பையும் ஏற்படுத்துவதற்கு வாய்ப்பை வழங்கும் தருணமாக அமையட்டும் என வாழ்த்தினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

32 அணிகள் போட்டியிடும் 2018ம் ஆண்டின் உலக கோப்பை கால்பந்து போட்டி, ஜூன் 14ம் தேதி முதல், ஜூலை 15ம் தேதி வரை, இரஷ்யாவின், 11 நகரங்களில், 12 விளையாட்டு திடல்களில் நடைபெறுகின்றது.

மேலும், ஜூன் 13, இப்புதனன்று புனித அந்தோனியார் விழா சிறப்பிக்கப்பட்டதைக் குறிப்பிட்டு, அப்புனிதர், திருஅவையின் மறைவல்லுனர் மற்றும் ஏழைகளின் பாதுகாவலர் என்றுரைத்த திருத்தந்தை, உண்மையான மற்றும் கைம்மாறு கருதாத அன்பின் அழகை நமக்குக் கற்றுத்தருகிறார் என்று கூறினார்.

அன்புகூர்வதால் நாம் அன்புகூரப்படுகின்றோம், உங்களைச் சுற்றியுள்ள எவரும் ஒதுக்கப்பட்டதாக உணரக்கூடாது, அதேநேரம், நீங்கள் ஒவ்வொருவரும், வாழ்வின் துன்பநேரங்களில், மேலும் மேலும் உறுதியாய் இருங்கள் எனவும், இப்புதன் பொதுமறைக்கல்வியுரையில் கலந்துகொண்டவர்களிடம் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.