2018-06-11 16:28:00

பொறாமை, தவறான குற்றச்சாட்டுகளுக்கு இட்டுச்செல்கின்றது


ஜூன்,11,2018. பிறரின் நன்மைத்தனம் பற்றி பொறாமை கொள்வது, தவறானக் குற்றச்சாட்டுகளுக்கு வழியமைக்கும் மற்றும், அந்த மனிதரின் நல்ல பெயரைக் கெடுக்கும் நோக்கம் கொண்டது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஞாயிறு மூவேளை செப உரையில் கூறினார்.

இஞ்ஞாயிறு நண்பகலில், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த இருபதாயிரத்திற்கு மேற்பட்ட திருப்பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு, இஞ்ஞாயிறு நற்செய்தியை மையப்படுத்தி மூவேளை செப உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒருவரின் நன்மைத்தனம் மற்றும் அவரின் நற்பணிகள் மீது பொறாமைப்படுவது, தவறான குற்றச்சாட்டுக்களை இட்டுச்செல்லும் என்று கூறினார்.

மறைநூல் அறிஞர்கள், தன் சொந்த குடும்ப உறுப்பினர்கள் ஆகிய இருதரப்பிலிருந்தும் புரிந்துகொள்ளாமையை இயேசு எதிர்கொண்டார் என்றும், இயேசு காலத்து மறைநூல் அறிஞர்கள், மறைநூல்களை நன்கு கற்றுத்தேர்ந்தவர்கள், இவர்கள் அவற்றை மக்களுக்கு விளக்க வேண்டியவர்கள் என்றும் திருத்தந்தை கூறினார்.

இயேசுவின் புகழ் பரவத்தொடங்கியவுடன், இயேசுவை மதிப்பிழக்கச் செய்வதற்காக  சில மறைநூல் அறிஞர்கள், கலிலேயாவுக்கு அனுப்பப்பட்டனர் என்றும், கடவுளின் வல்லமையால் அல்லாமல், பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக்கொண்டே இயேசு பேய்களை ஓட்டுகிறார் என்று மக்களை நம்பவைப்பதற்கு அவர்கள் விரும்பினர் என்றும் கூறியத் திருத்தந்தை, இது தூய ஆவியாருக்கு எதிரான பாவம் என்று கூறினார்.

மன்னிக்கமுடியாத ஒரே பாவம் தூய ஆவியாருக்கு எதிரான தெய்வநிந்தனை என்றும், இது, இயேசுவில் செயல்படுகின்ற கடவுளின் இரக்கத்திற்கு இதயத்தை மூடிவிடுவதிலிருந்து ஆரம்பிக்கின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.

சிலநேரங்களில், ஒருவரின் நன்மைத்தனம் மற்றும் அவரின் நற்பணிகள் மீது மிக அதிகமாகப் பொறாமைப்படுவது, தவறான குற்றச்சாட்டுக்களுக்கு இட்டுச்செல்லும் என்று எச்சரித்த திருத்தந்தை, இது மரணத்தை வருவிக்கக்கூடிய நஞ்சு என்றும், கடவுள் இந்தப் பயங்கரமான சோதனையிலிருந்து நம்மைக் காப்பாராக என்றும் கூறினார்.

மேலும், இயேசுவின் குடும்ப உறுப்பினர்கள் அவரைப் புரிந்துகொள்ளாமல் இருந்தது பற்றிக் கூறியத் திருத்தந்தை, இயேசு தமது புதிய குடும்பத்தை, இயற்கையான உறவுகளின் அடிப்படையில் அல்லாமல் எவ்வாறு அமைத்தார் என்பதை, இந்தப் புரிந்துகொள்ளாமையிலிருந்து அவரால் விளக்க முடிந்தது என்றும் தெரிவித்தார்.

இயேசு கூறிய பதில், தம் தாய் மற்றும் குடும்பத்தின் மீதுள்ள மதிப்பைப் புறக்கணிப்பதாக இல்லாமல், தன் தாயான மரியா, எல்லாவற்றிலும், கடவுளின் விருப்பத்திற்குப் பணிந்து நடக்கும் நிறைவான சீடர் என்பதை பெரிய அளவில் அங்கீகரிப்பதாக இருந்தது என்று, மூவேளை செப உரையில் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.