2018-06-11 16:18:00

பிறருக்குப் பணிபுரிவது மகிழ்வுக்கு இட்டுச்செல்லும் பாதை


ஜூன்,11,2018. நம் அன்றாட வாழ்வின் மத்தியில் புனிதத்துவத்தை அடைவதற்கு, தூய ஆவியார் நமக்கு சக்தி அளிக்கிறார் என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், இத்திங்களன்று வெளியாயின.

மேலும், இத்தாலியின் மச்செராத்தாவிலிருந்து லொரேத்தோவிற்கு இச்சனிக்கிழமை இரவில் நடைப்பயணம் மேற்கொண்ட இளம் இத்தாலிய திருப்பயணிகளிடம் தொலைபேசியில் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்புகூர்வதன் வழியாக, உண்மையான மகிழ்ச்சியைத் தேடுமாறு கேட்டுக்கொண்டார். அன்புகூர்வதிலும், அன்புகூர அனுமதிப்பதிலும் உண்மையான மகிழ்ச்சி உள்ளது என்றும், வாழ்வு என்னும் பயணத்தில், ஒவ்வொருவரும், தனக்கும், பிறருக்கும் மகிழ்வைத் தேடுவதில் எப்போதும் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்றும், திருத்தந்தை கூறினார்.

பயணத்தைத் தொடங்கியுள்ள இளையோராகிய நீங்கள் துணிச்சல்மிக்கவர்கள், இது ஓர் நல்ல அடையாளம், ஏனெனில், வாழ்வில் ஒருவர் ஒரே இடத்தில் இருக்க இயலாது,  எனவும், இருபது வயதில் ஓய்வுபெற்றவர்கள் போன்று இளையோர் இருப்பது, மோசமான செயல் எனவும் திருத்தந்தை கூறியுள்ளார்.

பிறரை அன்புகூர்வதும், பிறருக்குச் சேவையாற்றுவதும், மகிழ்வுக்கு இட்டுச்செல்லும் பாதை என்றும், இவற்றில் இளையோர் எப்போதும் முன்னோக்கிச் செல்லுமாறும் திருத்தந்தை கூறினார்.  

இத்தாலியின் மார்க்கே மாநிலத்தில், மச்செராத்தா நகரிலிருந்து, லொரேத்தோ அன்னை மரியா திருத்தலத்திற்கு, இச்சனிக்கிழமை இரவில், 28 கிலோ மீட்டர் தூரம், பல்லாயிரக்கணக்கான இளையோர் நடைப்பயணம் மேற்கொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.