2018-06-08 16:50:00

இமயமாகும் இளமை …......: தமிழர்களிடம் இருப்பது ஒற்றுமையின்மை


ஆதாயம் அடைய முடியாதவர்கள், அவசரமாய் ஆண்டுவிட வேண்டும் என்று சிந்தனையில் இருந்தவர்கள் அத்தனை பேர்களும், தமிழ் இனத்தையும், தமிழனின் மொத்த பண்பாட்டு, கலாச்சாரத்தையும், இன்றுபோல் அன்றும் சிதறடித்தார்கள் என்கிறது வரலாறு. சோழருக்குப்பின் வந்த பாண்டியர் ஆட்சியும் (கி.பி.1200 முதல் 1300) வீழ்ச்சி அடைந்ததற்கு முக்கியக் காரணம், தமிழர்களின் முக்கியக் குணமான ஒற்றுமையின்மையே. மாறவர்மன் குலசேகரப் பாண்டியன் மறைவுக்குப்பின், அவரின் மகன்கள் சுந்தரப் பாண்டியன், வீரபாண்டியன் ஆகியோரிடையே கடுமையான வாரிசுப் போர் நடந்தது. வீரபாண்டியனிடம் தோற்று ஓடிய சுந்தரப் பாண்டியன் செய்த காரியம் என்ன தெரியுமா? படையெடுக்கப் பயந்துகொண்டிருந்த டில்லி அலாவூதின் கில்ஜியின் படைத்தலைவன் மாலிக்காபூருக்கு உதவி, பாண்டிய நாட்டுக்கு படையெடுக்க அத்தனை முன்னேற்பாடுகளையும் செய்து கொடுத்தார். படையெடுத்து வந்தவர்கள், தமிழர் பகுதியை அழித்து, மொத்த வளத்தையும் கைப்பற்றியதோடு அல்லாமல், கொடுக்கப்பட்டிருந்த வாக்குறுதியின்படி ஆசையோடு காத்திருந்த சுந்தரப் பாண்டியனையும் ஆட்சியில் அமரவிடவில்லை. வரலாறு காணாத கொலை, கொள்ளை, கற்பழிப்பு, சூறையாடல், கலப்பினம் என, மொத்தத்தில் மொத்த தமிழனத்தையும் ஊதித் தள்ளி விழுங்கி ஏப்பம் விட்டார்கள்.

ஆனால், இன்றுபோல் அன்றும், தூக்கம், நிம்மதி போன்ற எல்லாவற்றையும் தொலைத்துத் தெருவில் நின்றவர்கள் மக்கள் மட்டுமே. ஆட்சிகள் அத்தனையும் நமக்கு உணர்த்துவது ஒன்றே ஒன்றுதான். தமிழர்களிடம் இருப்பது ஒற்றுமையின்மை என்ற குணம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.