2018-06-07 15:53:00

திருத்தந்தை-நினைவும் நம்பிக்கையும் இணைந்தே செல்ல வேண்டும்


ஜூன்,07,2018. கிறிஸ்தவ வாழ்வில் முன்னோக்கிச் செல்வதற்கு, இயேசுவோடு நிகழ்ந்த முதல் சந்திப்புக்களையும், விசுவாசத்தை நமக்கு வழங்கியவர்களையும், அன்பின் சட்டத்தையும் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழனன்று மறையுரையாற்றினார்.

சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இவ்வியாழன் காலை திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ‘இயேசு கிறிஸ்துவை நினைவில் கொள்’ என,  புவலடிகளார் திமொத்தேயுவுக்குச் சொல்வது பற்றிய, இத்திருப்பலியின் முதல் வாசகத்தை (2திமொ.2,8-15) மையப்படுத்தி மறையுரையாற்றினார்.

கிறிஸ்தவ நினைவு என்பது, வாழ்வின் உப்பாகும் என்றும், முன்னோக்கிச் செல்வதற்கு  பின்னோக்கிப் பார்ப்பதாகும், அதாவது, இயேசுவைச் சந்தித்த முதல் தருணங்களை நினைத்து தியானிப்பதாகும், விசுவாசத்தை நமக்கு வழங்கியவர்களை நினைப்பதாகும், ஆண்டவர் நம் இதயங்களில் பதித்துள்ள அன்பின் சட்டத்தை நினைவில் கொள்வதாகும் என்றும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசு கிறிஸ்து நம் வாழ்வை மாற்றியபோது, தம் அழைப்பை நமக்குக் காட்டியபோது, துன்பநேரங்களில் அவர் நம்மைச் சந்தித்தபோது... இத்தகைய நேரங்கள் நம் இதயங்களில் இருக்கின்றன, அந்நேரங்களைத் தியானிக்க வேண்டும் என்று திருத்தந்தை கூறினார்.

விசுவாசத்தை நாம் தபாலில் பெறுவதில்லை, மாறாக, விசுவாசத்தை நமக்கு வழங்கிய அம்மாவை, பாட்டியை நினைவில் கொள்ள வேண்டும் என்றும், மறைசாட்சிய வாழ்வை எதிர்கொண்ட எண்ணற்ற ஆண்களும் பெண்களும் நமக்கு விசுவாசத்தை வழங்கியுள்ளனர் என்றும் உரைத்தார் திருத்தந்தை.

இஸ்ரயேலே கேள், நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர் என, இயேசு, மாற்கு நற்செய்தியில், சட்டம் பற்றி நமக்கு நினைவுபடுத்துகின்றார் என்றுரைத்த திருத்தந்தை, ஆண்டவர் நம் ஒவ்வொருவர் இதயத்தில் நுழைத்துள்ள அன்பின் சட்டத்தை நினைவில் வைத்துள்ளோமா, அதற்கு விசுவாசமாக இருக்கின்றோமா என நம்மையை நாம் கேள்வி கேட்குமாறும் கூறினார்.  

இவ்வுலகுக்கு வந்து, நமக்காகத் தம்மையே வழங்கி, மீண்டும் வரவிருக்கின்ற இயேசு கிறிஸ்துவை, நினைவின் ஆண்டவரை, நம்பிக்கையின் ஆண்டவரை நினைவில் கொள்வோம், இந்நினைவில் எவ்வாறு வாழ்கின்றோம் என, சில நிமிடங்கள் சிந்திப்போம் என, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், மறையுரையை நிறைவு செய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.