2018-06-06 14:58:00

ILOவின் 107வது அமர்வில் பேராயர் யுர்க்கோவிச்


ஜூன்,06,2018. இன்றைய உலகத்தின் புதிய சவால்கள் மத்தியில் தொழிலின் பொருள் குறித்து சிந்தித்துப் பார்க்கவேண்டியது உடனடி தேவையாக உள்ளது என்று, திருப்பீட அதிகாரி பேராயர் இவான் யுர்க்கோவிச் அவர்கள், தொழில் பற்றிய ஐ.நா. கருத்தரங்கு ஒன்றில் தெரிவித்தார்.
ILO எனப்படும் உலக தொழில் நிறுவனம், ஜெனீவாவில் நடத்திவரும் 107வது அமர்வில், இத்திங்களன்று உரையாற்றிய, ஜெனீவாவிலுள்ள ஐ.நா. நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு, திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பணியாற்றும், பேராயர் இவான் யுர்க்கோவிச் அவர்கள், தொழில் உலகில் இதற்குமுன் கண்டிராத அளவில், இக்காலத்தில்  ஏற்பட்டுவரும் மாற்றங்கள் குறித்து பேசினார். 
ILO தொழில் நிறுவனம், 2019ம் ஆண்டில் தன் நூறாவது ஆண்டை சிறப்பிப்பதற்காக, கடந்த இரு ஆண்டுகளாகத் தயாரித்துவருவது பற்றியும் குறிப்பிட்ட பேராயர் யுர்க்கோவிச் அவர்கள், பெண்கள், கல்வி பெறுவதற்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு, கட்டாயத் தொழில்கள் புரிவதிலிருந்து அவர்கள் நீக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றி எடுத்துரைத்தார்.
அனைவருக்கும் தரமான மற்றும் சரியான வேலைக்கும், ஆண்களுக்கும், பெண்களுக்கும் சம உரிமைகளும் உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் கூறிய பேராயர், பெண்கள், குடும்பத்தில் வேலை செய்துகொண்டு, வெளியிலும் அவர்கள் வேலை செய்வது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் எனவும் கூறினார்.
வேலைவாய்ப்பில், பெண்களுக்கு சமமாண்பு அளிப்பது ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திய பேராயர் யுர்க்கோவிச் அவர்கள், பணியிடங்களில் பெண்கள் பாலியல் முறையில் தொந்தரவு செய்யப்படுவதற்கு, திருப்பீடம் வன்மையாய் கண்டனம் தெரிவிக்கின்றது எனவும் கூறினார்.    
1919ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட உலக தொழில் நிறுவனத்தில், 187 நாடுகள் உறுப்புகளாக உள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.