2018-06-06 14:52:00

பல்சமய உரையாடல், வெறுப்புச் சுவரை தகர்க்கின்றது


ஜூன்,06,2018. பாகிஸ்தான் போன்ற, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற நாடுகளில், பல்சமய உரையாடல் வாழ்வின் ஓர் அங்கமாக அமைய வேண்டும் மற்றும் இந்த உரையாடல், எல்லாரையும் ஈடுபடுத்துவதாய் இருக்க வேண்டும் என்று, கராச்சி பேராயர் ஜோசப் கூட்ஸ் அவர்கள் கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் புதிய கர்தினாலாக அறிவிக்கப்பட்டிருக்கும், கராச்சி பேராயர் ஜோசப் கூட்ஸ் அவர்கள், ஒரு கோடியே 90 இலட்சம் முதல், 2 கோடியே பத்து இலட்சம் வரையில் மக்கள் வாழ்கின்ற கராச்சியில், இந்துக்களும், கிறிஸ்தவர்களும் அதிக அளவில் வாழ்கின்றனர் என்று கூறினார்.

உலகில் மக்கள் மிகவும் அதிகமாக வாழ்கின்ற நகரங்களில் ஒன்றான கராச்சியில், பாஹாய், பார்சி, சீக் ஆகிய மதத்தவரும் வாழ்கின்றனர் என்றும், இந்நகர், உண்மையிலே, பலஇன மற்றும் பல மதங்களைக் கொண்ட சமுதாயமாக உள்ளது என்றும் கூறினார், அந்நகர் பேராயர். தான் கர்தினாலாக அறிவிக்கப்பட்டவுடன், முதலில் வாழ்த்துக்கூறியவர்கள், ஏறக்குறைய இருபது மதத்தலைவர்களே என்று தெரிவித்த கராச்சி பேராயர், உரையாடல் சொற்களைவிட, உரையாடல் வாழ்வே மிகவும் முக்கியமானது என்று தான் நம்புவதாகத் தெரிவித்தார்.

லாகூரில் அமைதி மையத்தின் தலைவராக இருக்கும், தொமினிக்கன் சபை அருள்பணி James Channan அவர்களிடம் பல்சமய உரையாடல் பற்றிப் பேசுகையில் இவ்வாறு பகிர்ந்துகொண்டார், புதிய கர்தினால் ஜோசப் கூட்ஸ்.

ஆதாரம் : Fides /  வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.