2018-06-05 15:29:00

மாற்றுக்கருத்துக்களை மதிக்கும் பண்பை நோக்கி வலைத்தளங்கள்


ஜூன்,05,2018. சமூக வலைத்தளங்கள், கடவுளின் கொடை எனினும், அவற்றுக்குப் பெரும் பொறுப்பும் உள்ளது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாயன்று காணொளிச் செய்தி ஒன்றில் கூறியுள்ளார்.

ஜூன் மாதச் செபக்கருத்து பற்றி காணொளியில் பேசியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சமூகத்தொடர்பு தொழில்நுட்பம், தன் இடங்கள் மற்றும், கருவிகளுடன் எல்லைகளை நீட்டி, விரிவாக்கி, ஏராளமான மக்களைச் சென்றடைந்துள்ளது என்று கூறியுள்ளார். சமூகத்தொடர்பு தொழில்நுட்பம், சந்திப்பு மற்றும் ஒருமைப்பாட்டுக்கு அளப்பரிய வாய்ப்புக்களை வழங்குகின்றது என்றுரைத்துள்ள திருத்தந்தை, டிஜிட்டல் வலைத்தளம், புறக்கணிக்கும் இடமாக இல்லாமல், மனித சமுதாயத்தில் வளமையான மற்றும் ஒரு தெளிவான இடமாக இருக்க வேண்டும் என்ற ஆவலையும் தெரிவித்துள்ளார்.

பிறரது மாற்றுக்கருத்துக்களை மதிக்கும், உள்ளடக்கும் பண்பை நோக்கி சமூக வலைத்தளங்கள் பணியாற்றும்படியாக, இந்த ஜூன் மாதத்தில் செபிப்போம் என, இம்மாதச் செபக்கருத்து பற்றிய காணொளியில் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.