2018-06-05 16:06:00

விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஆயர்கள் ஆதரவு


ஜூன்,05,2018. நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராடும் விவசாயிகளுக்கு, இந்திய கத்தோலிக்கத் திருஅவை என்றும் ஆதரவாக இருக்கின்றது என்று, இந்திய ஆயர் பேரவையின் செயலர், ஆயர் தியோடர் மஸ்கரீனஸ் அவர்கள் கூறியுள்ளார்.

தங்களின் உற்பத்திக்கு விலை ஏற்றப்பட வேண்டும், கடன்கள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏழு பெரிய மாநிலங்களிலுள்ள இலட்சக்கணக்கான விவசாயிகள், இச்செவ்வாயன்று, பத்து நாள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். இவ்விவசாயிகளின் போராட்டத்திற்கு, உரிமை ஆர்வலர்களும், திருஅவை குழுக்களும், தங்கள் ஆதரவை வெளியிட்டுள்ளனர்.  

2017ம் ஆண்டு ஜூன் 6ம் தேதி, மத்திய பிரதேசம் மற்றும், மகராஷ்டிரா மாநிலங்களில் இதேமாதிரியான விவசாயிகளின் போராட்டங்களில் காவல்துறை சுட்டதில் ஆறு விவசாயிகள் கொல்லப்பட்டனர். அந்த நினைவுநாளையொட்டி, ஹரியானா, இராஜஸ்தான், பஞ்சாப், ஜம்மு—காஷ்மீர், மத்திய பிரதேசம், மகராஷ்டிரா, கர்நாடாகா ஆகிய ஏழு மாநிலங்களின் 130க்கும் மேற்பட்ட விவசாயக் கழகங்கள், இந்த பத்து நாள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளன.

இந்தியாவில் 2013ம் ஆண்டிலிருந்து, குறைந்தது 12 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளவேளை, இந்நிலையால் கவலையடைந்துள்ள கத்தோலிக்க திருஅவையும், பிற கிறிஸ்தவ சபைகளும், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

ஆதாரம் : UCAN/ வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.