2018-06-05 16:01:00

புலம்பெயர்வோர் பற்றிய ஐ.நா. அமர்வில் பேராயர் அவுசா


ஜூன்,05,2018. சட்டமுறையான புலம்பெயர்வை ஒழுங்குபடுத்தவும், புலம்பெயர்வோர்க்குப் பாதுகாப்பை உறுதிசெய்யவுமென, அரசுகளுக்கிடையே இடம்பெற்ற ஐந்தாவது கலந்துரையாடலின் தொடக்க நிகழ்வில், திருப்பீடத்தின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தார், திருப்பீட அதிகாரி ஒருவர்.

ஐ.நா.வின் நியுயார்க் தலைமையகத்தில், ஜூன் 04, இத்திங்களன்று நடைபெற்ற அமர்வில் உரையாற்றிய, ஐ.நா. தலைமையகத்தில் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றும், பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், புலம்பெயர்வோர் குறித்து உலக அளவில் ஓர் உடன்பாட்டை கொண்டுவருவதற்கு ஐ.நா. தொடர்ந்து எடுத்துவரும் முயற்சிகளை ஊக்குவித்தார்.

புலம்பெயர்வோர் குறித்து நிறைவேற்றப்படும் கொள்கைகள், அம்மக்களை ஏற்கும் நாடுகளின் தேவைகளுக்கும், அதேநேரம், புலம்பெயர்வோர் மற்றும் குடிபெயர்வோரின் நலவாழ்வை ஊக்குவிப்பதற்கும் உதவுவதாய் அமைய வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார், பேராயர் அவுசா.

இவ்விவகாரத்தில், ஒவ்வொரு நாடும், ஐ.நா. நிறுவனங்களோடு சிறந்த முறையில்   எவ்வாறு பணிசெய்யலாம் என்பதைத் தீர்மானிக்க வேண்டுமெனவும் உரைத்த பேராயர் அவுசா அவர்கள், புலம்பெயரும் இலட்சக்கணக்கான மக்களுக்கு, மதம் சார்ந்த நிறுவனங்கள் மிகச் சிறப்பாகப் பணியாற்றி வருவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன என்பதையும் விளக்கினார்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.